கர்நாடகாவில், முதலமைச்சர்  குமாரசாமி தலைமையிலான, மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது.  இங்கு, ஆளும் கூட்டணியை சேர்ந்த, 15 எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை, சட்டசபையில், குமாரசாமி தாக்கல் செய்தார். அதன் மீது, இரண்டு நாட்கள் மட்டுமே விவாதம் நடந்தது.

கடந்த, 19ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் வஜுபாய் வாலா இரண்டு முறை உத்தரவிட்டும், அதை மதிக்காமல், நம்பிக்கை ஓட்டெடுப்பை, முதல்வர் குமாரசாமி புறக்கணித்தார். இரண்டு நாட்கள் நடந்த கூட்டத் தொடர் நிகழ்வுகள் பற்றி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, கவர்னர் வஜுபாய் வாலா, ஏற்கனவே அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் இன்றும்(விவாதம் நடந்ததை தொடர்ந்து, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில், அரசுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 105 பேரும் ஓட்டளித்தனர். இதன் மூலம் சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமி அரசு கவிழ்ந்தது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., சட்டசபை கூட்டத்திற்கு வரவில்லை.

அரசு கவிழ்ந்ததையடுத்து முதலமைச்சர் குமாரசாமி ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட  ஆளுநர் வாஜுபாய் வாலா புதிய அரசு அமையும் வரை குமாராசாமி காபந்து முதலமைச்சராக தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.