காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்எல்ஏக்கள் 15 பேர் மற்றும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் பதவி விலகியதையடுத்து கார்நாடகாவில் குமாராசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இதையடுத்து  நான்கு நாட்கள் இழுபறிக்குப் பின் இன்று நப்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

முன்னதாக கர்நாடக சட்டசபையில் முதமைச்சர்  குமாரசாமி  உருக்கமாக உரையாற்றினார்.


அப்போது கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. நான் வாழ்கையில் பல தவறுகளை செய்துள்ளேன், நல்ல விஷயங்கள் பல செய்துள்ளேன்.

நான் என்றும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டது கிடையாது, நான் திருமணம் செய்தபோது எனது மனைவி என்னிடம் வாங்கிய முதல் சத்தியம் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது தான்.

காலத்தின் கட்டாயத்தால் நான் அரசியலில் நுழைந்தேன், அதே கட்டாயத்தின்பேரில் எனது மனைவியும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது என் முன்பு அமர்ந்துள்ளார் என கூறினார். நீண்ட நேர உரையை அவர் முடித்த பிறகு  குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

முதலில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதையடுத்து பகுதி வாரியாக தனித்தனியாக வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் அரசுக்கு எதிராக 105 வாக்குகளும், குமாரசாமிக்கு ஆதரவாக 99 வாக்குகளும்  பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது.