நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது நீங்கள் வெறும் கிளைச்செயலாளர்தான் என்று துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை கலாய்த்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வீடுகளில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தத் தயாரா? என்று கே.எஸ்.அழகிரி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூலூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் பல ஆண்டுகளாகிவிட்டன. இந்த கே.எஸ்.அழகிரி எங்கிருந்து புதிதாக வந்தார் என மரண கலாய் கலாய்த்தார். 

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கொள்கை என்பதே ஒன்னும் இல்லை, மத்தியிலிருக்கும் மோடியின் பாதுகாப்பிலும், கட்டுப்பாட்டிலும்தான் அவர்கள் இருக்கிறார்கள். 

காங்கிரஸ் காணாமல்போன கட்சி, என்னை எங்கிருந்து வந்தார் எனவும் ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார். நான் சொல்ற விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவரு பெரியகுளத்தில் கிளைச்செயலாளராக இருந்தபோது, நான் தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக சட்டமன்றத்துக்குச் சென்றவன். நான் காங்கிரஸில் தான் இருக்கிறேன், தர்மயுத்தம் என ஒன்றை நடத்தி அவர் தான் காணாமல் போயுள்ளார் என்று காட்டமாக பேசியிருந்தார்.