ரஜினி பா.ஜ.க.வில் இணைந்தாலும் அல்லது தனிக்கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 10 அமைச்சர்கள் ஒரே நேரத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்வது ஏதாவது காரணமாக இருக்கலாம். இந்த பயணம் நல்ல முன் மாதிரி அல்ல. தமிழ்நாட்டில் நிர்வாகம் என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு ஆதாரம் கூட இல்லை. அவரது கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

ரஜினி பா.ஜ.க.வில் இணைந்தாலும் அல்லது தனிக்கட்சி தொடங்கினாலும் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகம் முழுவதும் குடி மராமத்து பணிகள் சரியாக நடைபெறவில்லை. முறைகேடு நடைபெறுகிறது. மத்திய பா.ஜ.க. அரசு பதவி ஏற்று கடந்த 100 நாளில் பரிதாபகரமான தோல்வியை சந்தித்துள்ளது. ஆட்டோ மொபைல் துறையில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்பு 3 ஆண்டுகளுக்கு பின்பு இப்போது கடுமையாக எதிரொலித்துள்ளது.

காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட முடியாமல் நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளனர். காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை தமிழகம், கேரளாவிற்கும் வரக்கூடிய ஆபத்து உள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து இடம் பெற்றுள்ளது. கல்வித்துறையை தவறான பாதைக்கு அழைத்து செல்லக்கூடியது.

எந்த துறையிலும் சிறு முன்னேற்றம் கூட அடையவில்லை. காங்கிரஸ் காலத்தில் 9 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதை மறைக்க ஜாதி, மத, மொழி, கடவுள் ஆகியவற்றை மையமாக வைத்து அரசியல் செய்கின்றனர்’’ என அவர் தெரிவித்தார்.