சிறையில் இருக்கும் போதும் அமைச்சர் பதவியில் இருந்த அமித்ஷா.! அவருக்கு மட்டும் என்ன புதிய சட்டமா.? கேஎஸ் அழகிரி
இந்திய விளையாட்டு வீராங்கனைகள் பாரதிய ஜனதா உறுப்பினர் மீது பாலியல் குற்றம் சுமத்திய நிலையில், பாலியல் குற்றத்திற்காக அவரை விசாரணை செய்தீர்களா என கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பினார்.
இழிவாக பேசுபவர்களுக்கு பாஜக ஆதரவு
முன்னாள் அமைச்சர் கக்கனின் 116வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் அல்லாத நபர்கள் கூட கக்கனை பற்றி பேசினால் மெய் மறந்து கண்கள் லேசாக கலங்கும் வகையில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் என குறிப்பிட்டார்.
தமிழக பாரதிய ஜனதா தொடர்ச்சியாக இழிவான செய்திகளை செய்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷனை பாஜக நிர்வாகி சூர்யா என்பவர் மிகவும் கீழ்த்தரமாக பேசி உள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் கீழ்த்தரமாக பேசுபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார். இழிவான பேசுபவர்களுக்கு எப்படி ஒரு அரசியல் கட்சி ஆதரவளிக்கிறது என கேள்வி எழுப்பினார். தமிழக பாரதிய ஜனதாவையும் இழிவான பதிவுகளை பதிவிடுபவர்களையும் கடுமையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து வருவதாக குறிப்பிட்டவர், அந்த அரசியலை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்கு தெரியும். எங்களுடைய கேள்வி இரண்டு தான், நள்ளிரவில் ஒரு அமைச்சரை எப்படி கைது செய்யலாம், சாட்சியும் இல்லாம எப்படி கைது செய்யலாம். சமூகவிரோதியை போல் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜி மீது குற்றம் இருப்பதாக கருதினால் விசாரணைக்கு அழைத்து வந்து விசாரணை செய்யலாம். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை தண்டியுங்கள்.
அதிமுக அமைச்சர்கள் குற்றம் செய்த போது தமிழக காவல்துறை விசாரணை நடத்தி அமலாக்கதுறையிடம் அறிவித்தபோதும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை. டெல்லியில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்கள் பெற்றவர்கள் பெண் சமூகத்திற்கு மரியாதை ஏற்படுத்தியவர்கள் அனைத்து விளையாட்டு வீராங்கனையும் பாரதிய ஜனதா உறுப்பினர் மீது பாலியல் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் அந்த பாலியல் குற்றத்திற்காக அவரை விசாரணை செய்தீர்களா என கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் வெறும் 'காகிதப்புலி'
பாரதிய ஜனதாவினருக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பியவர், நாயை அழைத்து செல்வது போல் அழைத்து சென்றுள்ளீர்கள். மக்கள் செல்வாக்கு உடையவரை உங்கள் லட்சியத்திற்கு எதிராக இருப்பவர்களை இழிவு செய்யும் வகையில் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். இரண்டு நாட்களில் இரண்டு தோல்விகளை ஆளுநர் சந்தித்துள்ளதாக கூறியவர், ஆளுநர் வெறும் 'காகிதப்புலி' மட்டுமே, ஒரு ஆளுநர் பரிதாபம் அடையும் வகையில் இப்படி தோல்வி அடையக் கூடாது என விமர்சித்தார்.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருக்கக் கூடாதா என கேள்வி எழுப்பியவர், குற்றம் சுமத்தப்பட்டாலே அவர் குற்றவாளி கருத முடியாது. அமித்ஷா சிறையில் இருந்த போதே அமைச்சராக இருந்தார் அமித்ஷாவிற்கு மட்டும் புதிய சட்டம் எழுதி இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்
காங்கிரஸ் கூட்டத்தில் அடித்துக்கொண்ட நிர்வாகிகள்.. பதறவைக்கும் காட்சிகள் - வைரல் வீடியோ