காந்திக்கும் காங்கிரஸுக்கும் தொப்புள்கொடி உறவு , ஆனால் பிஜேபிக்கு  துப்பாக்கியுடன் தான் உறவு  என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் காந்தி பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்‌.அழகிரி தூத்துக்குடி  விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். அதன்பொருட்டு கன்னியாகுமரியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி செல்ல முடிவு செய்துள்ளோம். அதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காந்தியின் நினைவுக்கும் கன்னியாகுமரிக்கும் மிகுந்த பொருத்தமுடையது. ஆனால் பிஜேபியின் தற்போது எல்லாவற்றையும் புதிதாகச் செய்து வருகிறார்கள்.

காந்திக்கும்- காங்கிரஸுக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. ஆனால் பாஜகவுக்கு துப்பாக்கியுடன் தான் உறவு உண்டு. சுதந்திரத்திற்காக பாஜகவினர் ஒரு நிமிஷம் கூட சிறையில் இருந்தது கிடையாது ஆனால் எங்களுடைய ஜனநாயகம் அவர்களையும் அங்கீகரித்துள்ளது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்க  கடுமையாகப் பணியாற்றுவோம். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிச்சயமாக வைகோவை அழைப்போம் மற்றும் தமிழக எம்.பி.க்கள் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒரே மாதத்தில் செய்துள்ளனர். தபால் துறை, ரயில்வே துறை ஆகியவற்றில் தமிழில் தேர்வு எழுதுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதைவிட ஆக்கபூர்வ நடவடிக்கை வேறு எதுவும் வேண்டாம். இடைத்தேர்தலில், பணம் மக்களைச் சென்று சேராது, சேவைதான் மக்களைச் சென்று சேரும். ஆகவே சேவையை முன்வைத்து இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம்.

தமிழக அரசு செயலிழந்து விட்டது இதனால் மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி ஆதாரங்களைப் பெற முடியவில்லை. மத்திய அரசை எதிர்த்துக் கூடப் பேச முடியாமல் ஆளுங்கட்சி இருக்கிறது. எனவே இந்த அடிமை அரசு தேவையா?. இந்த அடிமை அரசை நீக்கிவிட்டு மக்கள் அரசை ஏற்படுத்த வேண்டும். மத்தியிலும் பொருளாதாரம் சீரழிந்து மோட்டார் வாகன உற்பத்தி சரிவடைந்துவிட்டது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் விவசாயப் பொருள் உற்பத்தியும் 2 சதவீதம் குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலை அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. மத்திய அரசின் ஆண்டு செலவு 14 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. ஏனெனில் செலவு செய்வதற்கு மத்திய அரசிடம் பணம் இல்லை.

தொழில் உற்பத்தியை பெருக்க GST வரியை நெறிப்படுத்தி குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் கார்ப்பரேட் வரியை மத்திய அரசு குறைத்ததால் பெரு நிறுவனங்களும், பெரும் முதலாளிகளுமே லாபம் அடைந்துள்ளனர். மத்திய அரசு எதிரும் புதிரான செயல்களைச் செய்வது தான்  துக்ளக் ஆட்சியாகும். இடைத்தேர்தலில் வெற்றி என்பது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாகும். எனவே மோடி என்பவர் ஒரு மாயையாகும், அவருடைய பிம்பம் மெல்ல, மெல்ல உடைந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு எல்லாவற்றையும் கார்ப்பரேட் போல விளம்பரம் செய்து வருகிறது‌. காங்கிரஸ் மட்டுமே இந்தியாவில் நிலையான, வலிமையான ஆட்சியைத் தர முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் 19 கொலைகள் நடைபெறும் வரையில் மாவட்ட நிர்வாகமும், போலீஸும் என்ன செய்து கொண்டிருந்தது. ஆகவே மக்களை வாழவைப்பதற்கான அக்கறை ஆட்சியாளர்களிடம் இல்லை.

தமிழகத்தில் தொழில் தொடங்க பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி உதவிகரமாக இல்லை. அதனாலேயே தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்களின் ஆலை விரிவாக்கத்தை மற்ற மாநிலங்களில் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது போல் உள்ளது தமிழக ஆட்சியாளர்களின் செயல்.  மக்களை திசை திருப்ப மத்திய பிஜேபி ஆட்சி என்ன செய்து கொண்டு இருக்கிறதோ, அதைப் பின்பற்றியே இங்குள்ள அதிமுக அரசும் செய்கிறது. நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு  ராகுல் காந்தியைப் பிரச்சாரத்திற்கு அழைப்போம் என்று தெரிவித்தார்.