தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் திடீரென செய்யப்பட்டுள்ள மாற்றம் தி.மு.க தலைமைக்கு ராகுல் வைத்த செக் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவரை மாற்றுவது என்று ராகுல் கடந்த ஆண்டே முடிவுக்கு வந்துவிட்டார். இதற்கு காரணம் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தி.மு.க தரப்புக்கு திருநாவுக்கரசர் டஃப் கொடுக்காதது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு ஒன்பது இடங்கள் என்று தி.மு.க இறுதி செய்த விவகாரத்தின் பின்னணியில் திருநாவுக்கரசர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

அதாவது தி.மு.க தரப்புடனான பேச்சின் போது சரியான முறையில் அக்கட்சி நிர்வாகிகளை திருநாவுக்கரசர் எதிர்கொள்ளவில்லை என்று ஒரு புகார் உண்டு. மேலும் தமிழகத்தில் 11 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ராகுல் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தி.மு.க தரப்பில் பேரம் பேசி பணிய வைக்க ப.சிதம்பரம் தான் சரியான நபராக இருப்பார் என்று ராகுல் கருதியுள்ளார். 

இதனை தொடர்ந்தே ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகியுள்ளார். விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் ப.சிதம்பரம் தலைமையில் தான் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் தனது ஆதரவாளர்களை பெருமளயில் குழுவில் இடம்பெறச் செய்ய சிதம்பரம் காய் நகர்த்தி வருகிறார். 

தி.மு.கவில் ஸ்டாலினுக்கும் சிதம்பரத்திற்கும் எப்போதுமே சுமூக உறவு இருந்தது கிடையாது. கலைஞர் மறைந்த போது கூட ப.சிதம்பரம் கோபாலபுரம் செல்லவில்லை. கனிமொழியின் சி.ஐ.டி காலனி சென்று தான் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார். மேலும் ப.சிதம்பரத்தை பொறுத்தவரை ஸ்டாலினை ஒரு மிகப்பெரிய தலைவராக எல்லாம் கருதுவது இல்லை. 

எனவே பேச்சுவார்த்தையின் போது கறார் காட்டி காங்கிரசுக்கு கணிசமான எண்ணிக்கையில் தொகுதிகளை ப.சிதம்பரம் பெறுவார் என்கிற நம்பிக்கை ராகுலுக்கு இருக்கிறது. அதனால் தான் அவரது ஆதரவாளரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கியுள்ளார் ராகுல். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு தாங்கள் விரும்பிய தொகுதிகளை கொடுத்து கம்பி நீட்டலாம் என்கிற தி.மு.கவின் ஆசையில் மண் விழுந்ததாக சொல்லப்படுகிறது. ப.சிதம்பரம் ஆதரவாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகியுள்ள நிலையில் தி.மு.கவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்காது என்றும் பேசப்படுகிறது. இதனால் கூட்டணியை எளிதாக்கிவிடலாம் என்கிற தி.மு.கவின் தலைமைக்கு தலைவலி ஆரம்பமாகியுள்ளது.