நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதே போல் புதிய தமிழகம், புதிய நீதி கட்சி மற்றும் ஐஜேகே கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வழங்கப்படும் செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் இந்த மூன்று கட்சிகளையும் அதிமுக – பாஜக தலைவர்கள் இது வரை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்  புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாஜ தலைவர்களே அசந்து போகும் அளவுக்கு அக்கட்சிக்கு ஆதரவாக கிருஷ்ணசாமி செயல்பட்டு வந்தார். தேவேந்திர குலவேளாளர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும். 7 பெயர்களில் அழைக்கப்படுகிறவர்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பினார். இந்த கோஷத்தை முன் வைத்து, பாஜக ஆதரவாளராக தன்னைக் காட்டிக் கொண்டார்

இந்தநிலையில், தமிழகத்தில் பாஜ தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அதிமுக தலைமை முந்திக்கொண்டு தன் தலைமையில் கூட்டணியை ஏற்படுத்தியது. அந்த கூட்டணியில் கிருஷ்ணசாமி இடம் பெற வேண்டும் என்பதற்காக அவரிடம்  அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, பாமகவுக்கு 7 தொகுதிகள் கொடுத்துள்ளீர்கள். அதனால் 2 தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என்று கிருஷ்ணசாமி கேட்டுள்ளார். ஆனால், தென்காசியை மட்டும் தருகிறோம். அந்த தொகுதியிலும் நீங்கள் அதிமுக சின்னத்தில் நிற்க வேண்டும். 2 தொகுதி தர முடியாது என்று கூறிவிட்டனர். ஆனால் கிருஷ்ணசாமி தொடர்ந்து முரண்டு பிடிக்கவே, ஆள விட்டா போதும் என்று அமைச்சர்கள் இருவரும் தெறித்து ஓடிவிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.