Asianet News TamilAsianet News Tamil

இந்தி வேண்டாம் என்று சொல்லி தமிழகத்தை துண்டாடுகிறார்கள்... கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி..!

இந்தி வேண்டாம் என நூறாண்டு காலம் கூப்பாடு போட்டு தமிழகத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி விட்டார்கள். இப்பொழுது புதிய கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள மும்மொழிக்கு எதிராக கொடி பிடிப்பது தமிழகத்தை உலக வரைபடத்திலிருந்து துண்டாடுவதற்கு சமம் என்று புதிய தமிழகம் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Krishnasamy on New education policy
Author
Chennai, First Published Sep 6, 2020, 9:10 PM IST

இதுதொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “35 வருடங்களுக்கு மேலாக மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த தேசியக் கல்விக் கொள்கையில் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது. இப்புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுவிட்டது. பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகி வருகின்றன. சில மாநிலங்கள் அதன் சாதக, பாதக அம்சங்களை ஆராய கமிட்டி அமைத்துள்ளன. தமிழ்நாடு மட்டும், இப்புதிய தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்றும் புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள பிற அம்சங்களை ஆராய கமிட்டி அமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

 Krishnasamy on New education policy
இந்தியா முழுவதும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட போதும், தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுத்தன. தமிழகத்தை பொருத்தமட்டில் மத்திய அரசு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பது ஒன்றே குறிக்கோளாக வைத்து பல அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்ல, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கல்வியை அரசியல் களமாக்கியதில்லை.
பிற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிடுகையில் உயர்கல்வி படித்தவர்கள் எண்ணிக்கை அதிகம்தான். ஆனால், அந்த உயர்கல்வி படித்தவர்கள் கூட வேலைவாய்ப்பைத் தேடி அலையக் கூடியவர்களாக இருக்கிறார்களே தவிர, தங்களை சுயமாக நிலைநிறுத்திக் கொள்ளத் தகுதி படைத்தவர்களாக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணமே நமது பாடத்திட்டத்தில் உள்ள கற்றல்-கற்பித்தல் முறையில் உள்ள அடிப்படைப் பிழையாகும். எனவே, இந்தப் பிழையை சரி செய்வதற்குண்டான வழியாகவே இப்பொழுது மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ள புதிய கல்விக் கொள்கையை ஆராய வேண்டும். 
இந்தப் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்திலிருந்து இரண்டு முனைகளில் எதிர்ப்பு கொடுக்கிறார்கள். ஒன்று மொழி, இரண்டாவது பாடத்திட்டம். அவர்கள் அதை இந்தி திணிப்பென்றும், சனாதான கல்வி என்றும் எளிதாக முத்திரை குத்தி விடுகிறார்கள். 10-ஆம் வகுப்பு மட்டுமே தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களுக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகளும் போட்டியிட வேண்டும் என தகுதியற்ற கல்வியை கொடுத்தது குற்றம் இல்லையா? இதை இப்பொழுதாவது திருத்த வேண்டிய அவசியம் உண்டா? இல்லையா?

Krishnasamy on New education policy
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 50,000 ஆகும். இதில் சர்வதேச பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 25,000-க்கும் குறைவில்லாமல் இருக்கும். சர்வதேச பாடத்திட்டத்தையும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் கடைபிடிக்கும் பள்ளிகளிலும், கேந்திர வித்யாலயா பள்ளிகளிலும் ஏற்கனவே மும்மொழி உண்டு. மும்மொழியே வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு முடிவெடுக்குமேயானால் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி ஏழை, எளிய, நடுத்தர, பின்தங்கிய வர்க்கத்தினரின் குழந்தைகள் மட்டும் இன்னொரு மொழியைக் கூடுதலாக கற்றுக்கொள்ளக் கூடாது என்பது ஓர வஞ்சனையாகாதா? 
அதுமட்டுமல்ல, இப்பொழுது வெளிநாட்டு பல்கலைக் கழகங்களும் தங்களது கிளைகளை இந்தியாவில் துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த பல்கலைக்கழகங்களில் தரத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வி அமையவில்லை என்று சொன்னால், அந்த பல்கலைக்கழகங்களில் பயில இந்தியக் கல்வி அமையவில்லை என்று சொன்னால் உலகத்தரம் வாய்ந்த கல்வியை நமது பிள்ளைகள் பெறுவதற்குண்டான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் அல்லவா? இந்தி வேண்டாம் என நூறாண்டு காலம் கூப்பாடு போட்டு தமிழகத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி விட்டார்கள். இப்பொழுது புதிய கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள மும்மொழிக்கு எதிராக கொடி பிடிப்பது தமிழகத்தை உலக வரைபடத்திலிருந்து துண்டாடுவதற்கு சமமானதாகும்.

 Krishnasamy on New education policy
தமிழக அரசியல் கட்சிகள் தங்களுடைய லாப நட்டக் கணக்குகளை மனதிலே கொண்டும், அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், மும்மொழி எதிர்ப்பு மற்றும் புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு என்பது ஏதுமறியாத வருங்கால தலைமுறைகளுக்கான வாய்ப்புகளை மறுப்பதற்குச் சமமாகும். புதிய கல்விக் கொள்கை ஒரு நன்கு கற்றறிந்த அறிவுஜீவி, அதுவும் இந்திய விண்வெளிக் கழகத்தில் தலைவராகவும் செயல்பட்ட ஒரு பெருந்தகையால் இந்தியாவில் இப்பொழுது நிலவக்கூடிய கல்வி முறையை, உலகில் பல்வேறு நாடுகளின் கல்விமுறையுடன் ஒப்பிட்டு அதன் சாராம்சத்தை அவர் வடித்துத் தந்துள்ளார். இது புத்தகப் புழுக்கள் ஆக்குவதற்காக அல்ல, வித்தகர்கள் ஆக்கிடும் திட்டம். அதில் பள்ளிக்கல்விக்கு மட்டும்தான் மாற்றத்தை கொடுத்திருக்கிறார்களா? அப்படி இல்லையே, மழலைக் கல்வி, ஆரம்பக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, கல்லூரி, பல்கலைக்கழக முறையிலும் மாற்றத்தை அறிவித்திருக்கிறார்கள் அல்லவா?
”வேப்பமர உச்சியில் நின்று பேயொன்னு ஆடுதுன்னு,
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க,
உன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க”
- என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலுக்கிணங்க இந்தி திணிப்பு, வர்ணாசிரம கொள்கை என்று புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பூச்சாண்டிக் கதைகளை விளையாட்டாக அல்ல, வினையமாக சொல்லி வைப்பார்கள். திராவிட மனுவாதிகள் நமது பிள்ளைகளின் திறமைகளை இளமையிலேயே கிள்ளி எறிய எத்தனிப்பார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம். எமது தமிழக மக்களும், மாணவர்களும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் பக்கமே..!” என்று அறிக்கையில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios