’அ.தி.மு.க. கூட்டணியில இணைந்து செயல்பட முடியாது. எங்களோட கொடியை பயன்படுத்த கூடாதுன்னும் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டோம். அ.தி.மு.க. தனது  கூட்டணி நண்பர்களிடம் சரியான அணுகுமுறையை காட்டுவதே இல்லை. ஏன் இப்படி நடந்துக்குறாங்கன்னே  புரியலை. எடப்பாடி அநியாயத்துக்கு தயங்கிட்டு இருக்கிறார்.’ என்று ஆளுங்கட்சியை  திணறத் திணற வெளுத்தெடுத்திருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.

 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தங்களின் கூட்டணியில் நின்று போட்டியிட்டு விட்டு, தேர்தல் முடிந்ததும் வழக்கம்போல் ஆதரவு கட்டையை உருவிய கிருஷ்ணசாமி மேல் செம்ம காண்டில் இருக்கிறது ஆளுங்கட்சி. அதிலும் ‘கொடியை பயன்படுத்த கூடாது’ என்று அவர் சொன்னதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அ.தி.மு.க.வின் தலைமை பீடத்தை டாக்டர்  அறுத்துப் போட்டு விமர்சன ஆபரேஷனை பண்ணிவிட, பதிலுக்கு அந்த தரப்பிலிருந்து அவரை வெளுத்தெடுத்திருக்கிறார் பொன்னையன். அக்கட்சியின் அமைப்புச் செயலாளரான அவர் “எங்கள் கட்சி தலைமையிலான கூட்டணிக்குள் குழப்பங்கள், சிக்கல்கள்! என்று சிலர் கிளப்பும் தகவல்கள் அக்மார்க் வதந்திகள். எங்களுடைய அப்ரோச்மெண்ட் சரியில்லை என்று சொல்பவர்களுக்கு சரியான புரிதல் இல்லை என்பதே அர்த்தம். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி இப்போது எங்களை விமர்சிக்கிறார். அவர் அப்படித்தானே விமர்சிப்பார், அதுதானே அவரது இயல்பு. அவர் எப்போதுமே தனியாக செயல்படும் மனிதர். எப்படின்னா, எங்கள் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு ஜெயித்தால், உடனே எதிர்க்கட்சி கூட்டணிக்குச் சென்று ஆதரவு கொடுப்பார். அதுதான் அவரோட வழக்கம்.தாழ்த்தப்பட்டோர்! எனும் பிரிவிலிருந்து, பிற்படுத்தப்பட்டோர்! எனும் நிலைக்கு மாற்ற வேண்டும் என அவர் கேட்கிறார். ஆனால் அவரது கோரிக்கையை சம்பந்தப்பட்ட பள்ளர்களே ஏற்கவில்லை. அதனால்தான் அவரது கோட்டையாக இருந்த தொகுதியிலேயே தோற்றுப் போனார். எதையும் எடுத்தோம், கவிழ்த்தோமுன்னு செஞ்சுட முடியாது. பொறுமை, நிதானமாகத்தான் அரசு முடிவுகள் எடுக்கப்படும்.

இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் கூட இப்படியெல்லாம் பேசுபவர்களை என்ன பண்ணுறது?எங்கள் கூட்டணி நண்பர்கள் ஆதரவு கொடுத்தால் நன்றி சொல்வோம், ஆதரவு கொடுக்காமல் விலகிச் சென்றால் அதற்காக வசை பாட மாட்டோம். இதுதான் எங்கள் ஸ்டைல்.” என்கிறார். அப்படிங்ளா? சொல்லவேயில்ல!.....