தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த காமராஜர், நதிகளின் குறுக்கே அணைகளை கட்டி, கால்வாய்களை அமைத்து உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும் என திட்டம் வகுத்தார். அதன்படி 1952ம் ஆண்டு அப்போதைய சேலம் மாவட்டத்தில் இருந்த கிருஷ்ணகிரி பகுதியில் ஓடுகின்ற தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பெரியமுத்துார் என்ற இடத்தில் அணை கட்ட வேண்டும் என நீர் ஆதாரத் துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அன்றைய பொறியாளர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து, அணையைக் கட்ட வேண்டுமென்றால் இரண்டாயிரம் ஏக்கர் நிலம் அரசுக்கு தேவை என காமராஜரிடம் அறிக்கையினை சமர்ப்பித்தனர். உணவு பஞ்சத்தை போக்க அணையைக் கட்டியே தீரவேண்டும் என அதிகாரிகளுக்கு காமராஜர் உத்தரவிட்டார். 

இதையடுத்து இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு விவசாயம் செய்து வந்த கிராம மக்களை, அங்கிருந்து வெளியேறும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் விவசாயிகள் அதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து காமராஜர் நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேறு இடம் ஒதுக்கிக் தருவதாக கூறியதால், விவசாயிகள் நிலத்தைக் கொடுத்தனர். 
அதன் பின்னர் கடந்த 1955ம் ஆண்டு ஜனவரி 3ல், அணையைக் கட்டும் பணிகள் துவங்கியது. இந்த பணி துவங்கியதும், அணையின் நீர்மட்டம், 57 அடியாக உயர்த்தக் கூடாது என பல்வேறு போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து அணையில், 52 அடி உயரத்திற்கு மட்டும் தண்ணீர் தேக்கி வைக்க காமராஜர் உத்தரவிட்டார். பின்னர் கட்டுமான பணிகள் முடிந்து, 

அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, மதகுகள் வழியாக, 1957ம் ஆண்டு நவம்பர் 10ல், அப்போதைய மராமத்து அமைச்சர் கக்கன் தலைமையில் நடந்த விழாவில், சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராஜர் தண்ணீரை திறந்து வைத்தார்.அதன்  மூலம் அப்போது  9,012 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. எந்த வறட்சிக்கும் தாக்கு பிடித்து விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுத்து வந்த இந்த அணையால் கடந்த 62 ஆண்டுகளில், 40 ஆயிரம் ஏக்கராக சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 62 ஆண்டுகளில் முதல் முறையாக அணையில் தண்ணீர் இன்றி வறண்டதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் பொட்டல் காடாக காட்சியளிக்கிறது. 

அணையில் இருந்து மொத்தத் தண்ணீரும் வெளியேறியதால், கடைசியாக கரு நிறத்தில்  சேர் மட்டுமே தேங்கி உள்ளது. இதனால் அதை சுத்தம் செய்வதற்காக நேற்று முன்தினம் கெலவரப்பள்ளி அணையில் இருந்து 180 கனஅடி நீரை திறந்துவிட்டனர். இதனால் தற்போது கடைசியாக அந்த தண்ணீரில் சேறும் அடித்துச் செல்கிறது. மேலும் இடது புறக்கால்வாயின் பின் பகுதியில் தேங்கியுள்ள மண்ணை பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். 62 ஆண்டுகளில் முதல் முறையாக அணை வற்றியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.