கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக முழுவதுமாக சசிகலா வசம் சென்று கொண்டிருந்த சமயம். அப்போது முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் கூட மவுனமாக இருந்து வந்தார். ஆனால் சசிகலாவிற்கு எதிராக முதல் கலகக்குரலை எழுப்பியவர் கே.பி.முனுசாமி தான். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை அழைத்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சசிகலாவின் செயல்பாடுகள் சந்தேகத்தை வரவழைப்பதாகவும் பேட்டி அளித்து அதிரடி கிளப்பினார். இதன் பிறகு ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடங்கிய போது அவரை முதல் ஆளாக சென்று சந்தித்து அடுத்தடுத்து கட்டத்திற்கு அரசியல் தளத்தில் அதிமுகவை நகர்த்தியவர் கே.பி.முனுசாமி.

ஓபிஎஸ்சுக்கு நெருக்கமாக இருந்த நிலையில் தற்போது மாநிலங்களவை எம்பியாக கே.பி.முனுசாமி இருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அதிமுகவின் செய்தி தொடர்பாளர் போல பேசிக் கொண்டிருக்கும் ஜெயக்குமார் வரை பாஜக தொடர்பான விஷயங்களில் அடக்கியே வாசிக்கின்றனர். ஆனால் இது திராவிட மண் இங்கு தேசிய கட்சிகளுக்கு வேலையில்லை என்று பகிரங்கமாக முழங்கியுள்ளார் கே.பி.முனுசாமி. சென்னையில் அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய கே.பி.முனுசாமி தான் இப்போது ஹீரோவாகியுள்ளார்.

ஏனென்றால் அதிமுக தொண்டர்கள் மட்டும் அல்ல தமிழகத்தில் திராவிட சித்தாந்தத்தை பேசக்கூடிய அனைவருமே கே.பி.முனுசாமியை கொண்டாடி வருகின்றனர். காரணம் தமிழகம் திராவிட பூமி என்பதை அவர் அடித்துக்கூறியுள்ளார். மேலும் முதலமைச்சர் பேச தயங்கக்ககூடிய விஷயங்களை அவர் முன்னிலையில் மிக துணிச்சலா பேசியுள்ளார். குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி, கூட்டணி ஆட்சிக்கு எல்லாம் வாய்ப்பு இல்லை. இதனை தேசியக்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று முனுசாமி கூறியது பாஜகவிற்கே அதிர்ச்சி வைத்தியமாகியுள்ளது.

குறைந்தது ஒன்று இரண்டு எம்எல்ஏக்களையாவது சட்டப்பேரவைக்குள் அனுப்ப வேண்டும் என்பது தான் பாஜகவின் தற்போதைய வியூகம். இதற்காக அதிமுகவை சாதகமாகவே அல்லது எதிராகவோ பயன்படுத்திக் கொள்ள பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதனால் தான் கூட்டணி உறுதி என்று எடப்பாடி பழனிசாமியே கூறிய பிறகும் பாஜக மவுனம் காத்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எனவே பாஜக போக்கில் விட்டுப்பிடிக்க அவர் முயற்சித்து வருகிறார்.

ஆனால் இதனை அதிமுகவில் ஒரு தரப்பினர் ஏற்கவில்லை. பாஜக இல்லாமல் நாம் தேர்தலை சந்திக்க முடியாதா? என்று கேட்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் தான் நீங்கள் இல்லை என்றாலும் நாங்கள் தான் ராஜா என்கிற ரீதியில் கே.பி.முனுசாமி பேசியுள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து இல்லை. அதிமுகவின் ஒட்டு மொத்த கருத்து என்கிறார்கள். அதனால் தான் துணிச்சலாக ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் பாஜகவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கே.பி.முனுசாமி பேசியதாக கூறுகிறார்கள்.

அதாவது சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை நாங்கள் கூறுவது தான் இறுதி ஏற்றுக் கொண்டால் நல்லது இல்லை என்றால் வேறு இடம் பாருங்கள் என்று பாஜகவிடம் கூறும் முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது. அதன் பின்னணியில் தான் கே.பி.முனுசாமியை பேசவிட்டு அதிமுக மேலிடம் ஆழம் பார்த்துள்ளதாக கூறுகிறார்கள்.