சென்னை கோயம்பேடு மார்கெட் கொரோனாவை பரப்பும் ஹாட்ஸ்பாட்டாக மாறி அதிர்ச்சி அளித்து வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து சொந்த ஊர் திரும்பிய வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. சென்னை கோயம்பேட்டில்  வேலைபார்த்த வியாபாரிகள், தொழிலாளர்கள், அங்கு பணியாற்றிய காவல்துறையினர் என சுமார் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேட்டில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி கடும் கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து பெரம்பலூர் திரும்பிய 19 பேருக்கும், கடலூர் திரும்பிய 7 பேருக்கும், அரியலூர் சென்ற ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊரான விழுப்புரம் வந்த 2 வியாபாரிகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.