மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.  

முதல்வர் பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை அனைத்து மாவட்டத்திலும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. தமிழகத்தில் எவருக்கு உணவு பிரச்சனை இல்லை. நோய்ப்பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு சிறந்த பலன் கிடைத்துள்ளது. விவசாயிகள் தங்கு தடையின்றி விவசாய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். 

மேலும், பேசிய அவர் ஆசியாவில் மிகப்பெரிய கோயம்பேடு சந்தையில் 20,000 பேர் அளவுக்கு பணி புரிந்ததும் தொற்று பரவியதற்கு காரணமாகும். தொற்று ஏற்படும் என முன்னரே கோயம்பேடு வியாபாரிகளை எச்சரித்தோம். ஆனால்,கோயம்பேடு வியாபாரிகள் எச்சரிக்கையை ஏற்கவில்லை. கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை. சென்னையில் இருந்து வேறு மாவட்டத்திற்கு சென்றவர்கள் மூலம் கொரோனா பரவியது. அதேபோல், பிற மாவட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சென்ற அனைவருக்கும் 3,4 நாட்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படும். சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தொற்று பரவுகிறது. 

மேலும், கோயம்பேட்டில் முகக்கவசம் அணியவில்லை. தனி மனித விலகல் கடைப்பிடிக்கவில்லை. அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது முற்றிலுமாக தவறு. இந்திவிலேயே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனைகள் அதிகரிப்பதால் நோய்த்தொற்றும் அதிகமாக உள்ளது. மக்கள் முகக்கவசங்களை தவறாமல் அணிய வேண்டும். கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். வெளியே போய் வீட்டுக்குத் திரும்பியதும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.