kovilpatti people anger against Minister kadambur Raju

தமிழக அமைச்சர்களுக்கு கட்டம் சரியில்லை போலும்! ஆங்காங்கே மக்கள் எதிர்ப்பு எனும் சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று வகையாக மாட்டியிருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவரான அமைச்சர் ராஜூ இன்று அங்கே அரசு விழாவில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார்.

அப்போது விழா இடத்தில் அவரை வழிமறித்த ஆண்களும், பெண்களும் குடிதண்ணீர் உள்ளிட்ட பல பிரச்னைகளை சொல்லி முற்றுகையிட்டிருக்கின்றனர். அதிலும் ஒரு வயதான பெண்மணி அமைச்சரை நகரவிடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு பிழிந்தெடுத்துவிட்டார். தன் முகத்தை நோக்கி க்கையை நீட்டி நீட்டி பேசிய அந்த பாட்டியின் கரத்தை ஒரு கட்டத்தில் பிடித்து வைத்துக் கொண்டார் அமைச்சர். ஆனாலும் கரங்களை உருவிவிட்டு மீண்டும் ஆவேச வாக்குவாதத்தை தொடர்ந்தா அந்த வயதான பெண்மணி. 

பின் ஒருவழியாக அங்கிருந்து எஸ்கேப் ஆகி விழாவுக்கு சென்ற அமைச்சர், விழா முடிந்து திரும்பி வருகையில் மீண்டும் மக்கள் முற்றுகையில் சிக்கினார். இந்த முறை ஆண்களும் மிக ஆவேசமாக அவரிடம் வாக்குவாதம் செய்தனர். ‘மக்கள் பிரதிநிதின்னு சொல்றேல்ல! அப்போ நின்னு குறையை கேளு. என்னமோ அரசு அதை செய்யுது, இதை செய்யுதுன்னு பேசுறீங்க. என்னதான் செய்யுது உங்க அரசு?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கடம்பூர் ராஜூவை கதிகலங்க வைத்துள்ளனர். 

விட்டால் போதுமென்று வெளிறிப்போய் ஓடி எஸ்கேப் ஆகியிருக்கிறார் அமைச்சர். கடம்பூரார் மக்கள் ஆவேசத்தில் முழுவதுமாக சிக்கி தெறியான நிகழ்வுகள் நொடி பிசகாமல் வீடியோவாக்கப்பட்டு இப்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றன.