பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. இதற்காக தமிழகம் வந்த நரேந்திர மோடி கோவளத்தில் உள்ள ‘தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்’ நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது சனிக்கிழமையன்று காலையில் நரேந்திர மோடி கோவளம் கடற்கரையில் நடைபயிற்சி சென்றபோது, கரையோரத்தில் கிடந்த குப்பைகளை சேகரித்தார்.

குப்பைகளை சேகரித்த வீடியோவை நரேந்திர மோடி தனது டுவிட்டரிலும் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த காட்சியில் அரை அடியில் ஒரு உருளை வடிவிலான பொருளை நரேந்திர மோடி தனது கையில் வைத்திருந்தார். 

அது என்ன பொருள்? என்று அறிந்து கொள்வதில் டுவிட்டரில் அவரை பின்தொடருபவர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர். ‘குப்பை சேகரிக்கும்போது நீங்கள் கையில் வைத்திருக்கும் பொருள் என்ன?’ என்று நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில், ‘‘மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி சென்றவாறு குப்பைகளை சேகரித்தபோது நான் கையில் வைத்திருந்தது என்ன? என்று என்னிடம் உங்களில் பலரும் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். அது நான் அடிக்கடி பயன்படுத்தும் ‘அக்குபிரஷர் ரோலர்’. இது மிகவும் பயன் உள்ளது என்று கண்டறிந்திருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘அக்குபிரஷர் ரோலர்’ தனது கையில் வைத்திருப்பது போன்ற 3 புகைப்படங்களையும் நரேந்திர மோடி அந்த டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.