Kovai : வேலுமணி கூட ஜெயிக்கட்டும்.. ஆனா செந்தில்பாலாஜி..? கோவை மேயர் தேர்தலுக்கு கமலின் புது ஸ்கெட்ச் !
கோவை மேயர் தேர்தலில் நடிகர் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், மேயர் வேட்பாளராக பிரபல கல்லூரி அதிபர் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவை தெற்கு தொகுதியில், ஆரம்பத்தில் இருந்து முன்னிலை வகித்து, இறுதியில் தோல்வி அடைந்தார் கமல்ஹாசன். கோவை தெற்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகள் பெற்றது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சென்னை,மதுரை,கோவை,திருச்சி உள்பட 10 தொகுதிகளில் மட்டும் மேயர் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து மக்கள் நீதி மய்ய வட்டாரங்களில் விசாரித்தோம்.
‘மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் குறிப்பிட்ட 10 மாநகராட்சிகளில் மட்டும் தேர்ந்தெடுத்து போட்டியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர். குறிப்பாக கமல் தோற்ற கோவையில் எப்படியாவது முழு பலத்தை காட்ட வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியை விட்டு சென்ற முக்கிய தலைவர்களில் ஒருவரான, மகேந்திரனை தோற்கடிக்க வேண்டும்.அதாவது, அவர் சேர்ந்து இருக்கும் திமுகவை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும். அதிமுகவை சேர்ந்தவர் கோவை மேயராக பொறுப்பேற்றாலும் சரி,ஆனால் திமுக கோவையில் வெல்லக் கூடாது என்று நடிகர் கமல் ஹாசன் முடிவு செய்துள்ளார்.மேலும், திமுக சார்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக சார்பாக எஸ்.பி வேலுமணி என பெருந்தலைகள் மோதிக் கொள்கின்றனர்.
அதிகாரம், பணம் என எல்லா விதத்திலும் இந்த இருவர்களுக்கும், கடுமையான போட்டி கொடுக்கும் வகையில் ஒரு வேட்பாளராக நிறுத்த வேண்டும்’ என்று முடிவு செய்து இருக்கிறார். நகராட்சித் தலைவர், மேயர் பதவியிடங்களுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படுமா அல்லது மறைமுகத் தேர்தல் நடத்தப்படுமா என்பது இன்னும் தெளிவுப்படுத்தாத நிலையில், இப்போதே இரண்டுக்கும் தயாராகி வருகின்றன அரசியல் கட்சிகள்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்குவதற்கான வேட்பாளர் தேர்வுப் பணிகள் தொடங்கிவிட்டன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கட்சியில் இருந்த பல முக்கிய நிர்வாகிகள் இப்போது வெளியேறிவிட்டதால் கமலுக்கு இது சவாலான காலகட்டமாக பார்க்கப்படுகிறது.
இதையெல்லாம் அலசிப்பார்த்த கமல் ஹாசன், கோவையை சேர்ந்த கல்லூரி அதிபர் அனுஷா ரவி என்பவரை கோவை மேயர் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவர் யாரென்றால், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.செந்தில் பாலாஜி,எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக களத்தில் நின்று, செலவு செய்ய இவர் சரியாக இருப்பார் என்றுதான் கமல் ஹாசன் இவர் பெயரை டிக் அடித்து வைத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். நாளுக்கு நாள் கோவை மாவட்ட அரசியல் களத்தில் பல்வேறு ட்விஸ்ட்கள் நடந்து வருகிறது. யார் கோவையை கைப்பற்றுவார் என்று பார்ப்போம்.