Kovai : அதிமுக மேயர் வேட்பாளர்கள் இவர்களா ? கோவையை கைப்பற்றப்போவது யார் ? திமுக Vs அதிமுக
கோவையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியும், என்ன ஆனாலும் விட்டுத்தரக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் போட்டிபோட்டுக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டனர்.
அதிகாரம் மற்றும் பணத்தின் துணையுடன் இறங்கும் செந்தில் பாலாஜியை, வேலுமணியும் அதே அளவுக்கு நிகராக பணத்தினை இறக்கி வேலை செய்து வருகிறார். யார் கோவையை கைப்பற்றுவார்கள் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, யார் கோவையின் மேயராக போட்டியிடுவார்கள் என்ற கேள்வி மற்றொரு பக்கம் எழுந்துள்ளது. கண்ணையன், பொங்கலூர் பழனிசாமி, என கோவை மாவட்டத்தில் திமுகவை வளர்த்த பல முன்னோடிகள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாகிவிட்டனர். ராமச்சந்திரன், பையா கவுண்டர், சிங்காநல்லூர் கார்த்திக், பைந்தமிழ் பாரி, காரமடை சுரேந்திரன், தென்றல் செல்வராஜ், சேனாதிபதி, என கோவை மாவட்ட திமுகவின் முக்கிய முகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
தற்போது இந்த பட்டியலில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து கோவை அரசியலுக்கு ஷிப்ட் ஆகியுள்ள கார்த்திகேய சிவசேனாபதியும், மநீமவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுன் இருக்கிறார்கள். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக வாஷ் அவுட் ஆனதால் முதலமைச்சர் ஸ்டாலின் பயங்கர அப்செட். எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அதிரடி அரசியல் செய்யத் தவறிய கோவை மாவட்ட நிர்வாகிகள் மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வருத்தமும், கோபமும் இருந்தாலும் கூட அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆட்சிப்பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
இதனிடையே விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால், கோவையை இப்படியே விட்டால் சரிபடாது என எண்ணிய முதலமைச்சர் ஸ்டாலின், அதிரடி அரசியல்வாதி என அறியப்படும் செந்தில்பாலாஜியை ஸ்பெஷல் அப்பாயிண்ட்மென்ட் செய்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியும் கோவையிலேயே இருக்கிறார்.அவரின் சொந்த தொகுதியும்,மாவட்டமுமான கரூர் போகாமலே இருக்கிறார்.
கோவை முழுவதும் சுற்றி சுற்றி சுழன்று வேலை செய்து கொண்டிருக்கிறார். எஸ்.பி.வேலுமணியும் ஓரளவுக்கு வேலை செய்து வருகிறார்.லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு, மிகவும் சைலன்ட் ஆகிவிட்டார் வேலுமணி. இருப்பினும் கோவை மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. திமுகவில் இருப்பதை போல, அதிமுகவிலும் பெரிய பட்டியல் நீள்கிறது.
முன்னாள் அமைச்சரும், முன்னாள் மேயரும் செ.ம.வேலுச்சாமி பெயர் அடிபடுகிறது. அநேகமாக இவருக்கு தான் மேயர் ‘சீட்’ என்று சொல்கிறார்கள். பெண் வேட்பாளர் என்றால், எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரான வடவள்ளி சந்திரசேகரின் மனைவி சர்மிளா தான்.இவர் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அநேகமாக கணவன் - மனைவியான ஆகிய இவர்களில் ஒருவருக்கு தான் சீட் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றது. அதுமட்டுமின்றி வழக்கம் போல, அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவிலும் மேயர் ரேசில் யார் போட்டியிடுவது என்று பலத்த போட்டியே நிலவுகிறது.
மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமியும், அதே போல மாநில செயற்குழு உறுப்பினருமான மைதிலியும் இந்த போட்டியில் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.மேலும் கீதா,ஜெயலட்சுமி என்று பெண்கள் பட்டியலும், கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார், முன்னாள் தலைவர் செல்வகுமார் ஆகியோர் இந்த பட்டியலில் இருக்கின்றனர். திமுகவும், அதிமுகவும் நேரடியாக கோவை மேயர் தேர்தலில் போட்டியிடும் என்றே தெரிகிறது.