கடந்த சிலநாட்களாக காங்கிரஸ் கட்சியில் நடக்கு குளறுபடியால் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது அம்பலமாகியுள்ளது. அதுவும் தலைவர் பதவி வாங்கிக்கொடுத்த ப.சிதம்பரம் மகனுக்கே சீட் கொடுக்க வேண்டாமென்று கே.எஸ்.அழகிரி தலைமைக்கு சொன்னதாக கராத்தே தியாகராஜன் கொளுத்திய திரி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவரான கராத்தே தியாகராஜன், கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி கடந்த ஜூன் 26ஆம் தேதி நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது அடுக்கடுக்காகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், கார்த்தி சிதம்பரத்துக்குப் பதில் நாசே ராமச்சந்திரனை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் எடுத்தவர் அழகிரி என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரியிடம்,  சிவகங்கை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம் வேண்டாம் என்றும், வேட்பாளராக நாசே ராமச்சந்திரனைக் கொண்டுவர முயற்சி செய்ததாக கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, எந்த மறுப்பும் தெரிவிக்காத அவர், “எனக்கு அதற்கான உரிமை உண்டு. மாநிலத் தலைவர் என்கிற அடிப்படையில் அகில இந்திய தலைமை என்னிடம் கருத்து கேட்கிறது. நான் எனக்கு விருப்பமானவர்களின் பெயரைத் தெரிவிப்பேன். அதில் ஏதும் தவறு இல்லையே. அதற்குத்தானே என்னை தலைவராக நியமித்துள்ளனர். 

எதுவுமே சொல்லாமல் வாயை மூடிக்கொண்டா இருக்க முடியும்? ஆமாம், நான் பலருக்குப் பரிந்துரை செய்தேன். சிலருக்குக் கிடைத்தது, பலருக்குக் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இதன் மூலம் சிவகங்கை தொகுதியை கார்த்தி சிதம்பரத்துக்கு ஒதுக்க கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்ததை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.  இதனால் தமிழகக் காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் இருப்பது உறுதியாகியுள்ளது.  அதாவது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை வாங்கிகொடுத்த சிதம்பரத்தின் முதுகில் குத்தியுள்ளது அம்பலமாகியிருக்கிறது.