நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  எனினும், குணமடைந்தோர் விகிதம் உயர்ந்து வருகிறது என அரசு ஆறுதல் தெரிவித்து வருகிறது.  இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது மராட்டியம் மாநிலம்.  அடுத்த இடத்தை  தமிழகம் கைப்பற்றியுள்ளது. ரயில் போக்குவரத்துகள் எல்லாம் செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்தநிலையில் கொல்கத்தா வரும் விமானங்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரைக்கும் தடை தொடரும் என அறிவித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி.

 மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களிலும், தமிழகத்தின் சென்னையிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது.இந்த நிலையில், மேற்கு வங்காள அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ள நகரங்களில் இருந்து (டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை மற்றும் ஆமதாபாத்) கொல்கத்தாவுக்கு விமானங்கள் வருவதற்கான தடை வரும் 31ந்தேதி வரை தொடரும் என தெரிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த ஜூலை 17ந்தேதி இதேபோன்று தடை விதித்து மேற்கு வங்காள அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது.  அதன்பின்னர் கடந்த ஜூலை 30ந்தேதி விமானங்களின் வருகைக்கு தற்காலிக தடை விதித்து மாநில அரசு சார்பில் மற்றொரு அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.