2019,ஜனவரி, 11 - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். முதல்வரான பின் அரசியல் ரீதியாக எத்தனையோ சவால்களை சந்தித்து, கடந்துவிட்டவரை பெரிதாய் காயப்படுத்திய விவகாரம் ஒன்று வெளியானது. 

அது தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ், கொடநாடில் கடந்த 2017ம் ஆண்டில் நடந்த கொள்ளை, கொலை, அதன் பின் நிகழ்ந்த நான்கு மரணங்கள் குறித்து வெளியிட்ட வீடியோ ஆவணங்களும், அந்த கொள்ளை - கொலையின் முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜ் இருவரை பேட்டி கொடுக்க வைத்து, ‘கொடநாடு கொலை உள்ளிட்ட சம்பவங்களின் பின்ணனியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.’ என்றொரு தகவலை வெளிப்படுத்திய விவகாரம் தான். 

தமிழக முதல்வரை ‘பதவியை விட்டு இறங்கு’ எனும் கோரிக்கையை முன்னிலைப்படுத்துவது போல் இந்த வீடியோ ஆவணமும், அதற்கு பின்னான பேட்டிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக  அரசியல் விமர்சகர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். ‘தமிழக முதல்வருக்கு சப்போர்ட் செய்து நாங்கள் பேசவில்லை. ஆனால் தேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சம்பவத்திலும், தொடர் மரணங்களிலும் ஒரு முதல்வரை சம்பந்தப்படுத்தி பேசப்படுகையில் அதை ஆராய்வதும், அதன் பின்னணியை அம்பலப்படுத்துவதும் கருத்துச் சுதந்திரம்தானே! கூலிப்படைகளை கொண்டு, ஒரு நான்காம் தர காரியத்தை ஒரு முதல்வரானவர் செய்திருப்பார் என்று ஏற்க முடியவில்லை. 

உண்மையில் கொடநாட்டில் உள்ல ஏதோ சில ஆவணங்கள் அவருக்கு வேண்டுமென்றால், அவர் கையில் முழு காவல்துறையும் இருக்க, அவரால் அந்தப் படையை வைத்து மிக எளிதாக அவற்றை ஊரறியாமல் கைப்பற்றி இருக்க முடியும். கூலிப்படைகளை வைத்து செய்திருப்பதன் மூலம் இதன் பின்னணி வேறு யாரோ என்பது புலனாகிறது. எடப்பாடிக்கு எதிராக யாரோ ரோட்டில் போகும் ஒரு கிறுக்கன் ஏதோ விமர்சனத்தை வைத்தாலும் கூட அதைப் பிடித்துக் கொண்டு ஆடுவது தினகரனின் ஸ்டைல். ஆனால் அந்த தினகரன் இந்த விவகாரத்தில் வாயை மூடி இருப்பது ஏன்? இதுவும் இடிக்கிறது.

  

மேத்யூஸ் இந்த வீடியோ ஆவணத்தை உருவாக்கியதில் எழுத்துப் பிழைகளில் துவங்கி பல சறுக்கல்கள் உள்ளன. ஆக இது அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட ஏதோ ஒரு அஸைன்மெண்டாக தெரிகிறது.” என்கிறார்கள். இந்நிலையில், அரசியல் உள்நோக்கமுடைய மற்று அரசின் நற்பெயரை சிதைக்கும் முயற்சி இது! என்று அமைச்சர் ஜெயக்குமார் இந்த விவகாரம் மீது கருத்து தெரிவித்துவிட்டார். 

இந்நிலையில், முதல்வரும் ‘அரசியல் உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட பொய்யான தகவல்கள் அடங்கிய வீடியோ இது. இந்த வீடியோவை உருவாக்கி வெளியிட்ட செய்தியாளர் மீது சட்டரீதியான வழக்கு நடத்தப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.” என்றிருக்கிறார். மேலும், ’அரசியல் பழிவாங்கலுக்காக என்னை எவ்வளவு வேணும்னாலும் கொச்சைப்படுத்தட்டும் பரவாயில்லை. இறந்தவங்களை தெய்வமுன்னு சொல்லுவாங்க, ஆனா இருக்கும்போதே தெய்வமாக வாழ்ந்த அம்மா, இறந்த பின் அவரை இப்படி அசிங்கப்படுத்துறாங்களே!’ என்று வருந்தியுள்ளாராம்.