கொடநாடு கொலை, கொள்ளை புகார் குறித்து நீதிவிசாரணை நடத்த முதல்வர் தயாரா என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலை தராத முதல்வர், வழக்கு மட்டுமே நடப்பதாக மழுப்பலான பதிலை அளித்துள்ளார். கொடநாடு விவகாரம் நீதி விசாரணை நடத்த முடியும் என முதல்வரால் கூறமுடியுமா என வினவியுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதல்வர் பதவிவிலக தாயரா? கொலை குற்றவாளி தமிழகத்தில் முதல்வராக இருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை குறித்து திமுக நீதிமன்றத்தை நாடும். ஒரு முதலமைச்சர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. கொடநாடு விவகாரத்தில் முதல்வர் குற்றம் அற்றவர் என நிரூபணமானால் மகிழ்ச்சி என்றார். 

ஊடகங்களில் சுதந்திரம் தமிழ்நாட்டில் மறுக்கப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கொடநாடு விவகாரத்தில் முக்கிய சாட்சியாக கருதப்படும் சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

கொடநாடு விவகாரம் தொடர்பாக நாளை ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து முறையிட உள்ளோம். மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் 
கோவிந்திடமும் முறையிட உள்ளோம் என்றார். தமிழகத்தில் ஊடகங்கள் மிரட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் ஊடகங்களை எடப்பாடி அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.