கொட நாடு விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் மீது எந்தத் தவறும் இல்லாத பட்சத்தில் அவர்கள் ஏன் பதற வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சாதிய உணர்வுதான் மதவெறிக்கு அடித்தளமாக அமையும் என்கிற அடிப்படையில்தான் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுகின்றன. இந்த சதித் திட்டம் தெரியாமல்தான் அதற்கு மக்கள் இரையாகிறார்கள். இதை முறியடிக்க வேண்டும். அதற்கு சமூக நீதிச் சமூகங்கள் ஒற்றுமையாக்க வேண்டும். விரைவில் இந்தியா பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. யார் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்பது முதன்மையான பிரச்னை கிடையாது.


எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைதான் மிகவும் அவசியம். அதன்பிறகு பிரதமர் யார் என்பதற்கு விடை கிடைத்து விடும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் உள்பட சமூக நீதி சார்ந்து திமுக மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் விசிக துணையாக இருக்கும். அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசினுடைய திட்டம், அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அடுத்து, பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.