Ko Pooja between IT raid

வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டாலும், மிக இயல்பாகவே தனது குடும்பத்தாருடன் டிடிவி தினகரன் கோ பூஜையை நடத்தினார். 

தமிழகம் உட்பட நாடு முழுவதும் சசிகலா, தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன் உள்ளிட்ட அனைவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை இன்று அதிகாலையில் இருந்தே நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறை சோதனை, வேறு சில நிறுவனங்கள் சார்ந்த இடங்களில் நடந்தாலும், பெரும்பாலும் ஜெயா தொலைக்காட்சி, மிடாஸ், ஜாஸ் சினிமாஸ் சார்ந்த, சசிகலா, தினகரன், திவாகரன் ஆதரவு உறவினர்கள், நண்பர்கள், கட்சி பிரமுகர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறையினர் இன்று சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டின் முன்பு பசுமாட்டை நிறுத்தி இந்த பூஜையை தினகரன் நடத்தினார். கோ பூஜையின்போது பசு, கன்றுக்கு தினகரன் மற்றும் மனைவி அனுராதா ஆகியோர் வாழைப்பழங்களை அளித்தனர். 

டிடிவி தினகரன் வீட்டில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல் துறையினர் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். வருமான வரித்துறையின் சோதனையின்போதும், டிடிவி தினகரன் இயல்பாகவே கோ பூஜையை நடத்தினார்.

தனது மனைவி அனுராதா, மகள் அனுராதாவுடன் கோபூஜை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அலுவலர் ஒருவர் வந்தார். அவரும் சென்று விட்டார். மீண்டும் வருவாரா என்று தெரியாது என்று தினகரன் கூறினார்.