தேர்தல் நெருங்கி வருவதால் இம்மாதம் 2 ஆயிரம் ரூபாயையும், தேர்தலுக்கு முன் 2 ஆயிரம் ரூபாயையும் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்காக மத்திய அரசு 2019-2020 நிதி ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாயும், 2018-2019 நிதி ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயையும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.  மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை 2,000 ரூபாய் என 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்க இருப்பதாக அறிவித்திருந்தது.

தற்போது தேர்தலுக்கு முன்பு இந்த நிதி உதவியை விவசாயிகளுக்கு அளித்தால் வாக்குகளை எளிதாகக் கவர முடியும் என கருதிய பாஜக தலைமையிலான மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் முதல் தவணையை இம்மாத இறுதிக்குள் வழங்கி விட்டால் தேர்தலுக்கு முன்பு இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் அளிக்க முடியும் என கணக்குபோட்டுள்ளது.

இந்த நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு 2 ஹெக்டேருக்கு குறைவாக அதாவது 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் அதிகப்படியான விவசாயிகள் உத்திரப்பிரதேசத்தில் உள்ளதால் யோகி ஆதித்யநாத் இந்த நிதி உதவியை வேகமாக அளிக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளார். இது தேர்தலை விரைவில் சந்திக்க உள்ள உத்திரப்பிரதேச மாநில எதிர் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசிடமிருந்து நேரடியாக வங்கி கணக்கில் அளிக்கப்பட உள்ள இந்த நிதி உதவியானது 2018 டிசம்பர் 1 முதல் 2019 மார்ச் 31-ம் தேதி வரையிலும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.