தற்போது திமுக ஆட்சியால் தமிழகம் கலியுகமாக மாறிவிட்டது. விரைவில் தமிழகத்தில் மீண்டும் ராமராஜ்யம் வரும் . தமிழகம் ராமராஜ்யமாக மாறும். எம்ஜிஆர்-ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும்.
தமிழகத்தில் மீண்டும் ராம ராஜ்ஜியத்தை அதிமுக அமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்த நிலையில், இங்கு சத்ய ராஜ்யமே தேவை என்று நடிகர் ராஜ் கிரண் தெரிவித்துள்ளார்.
சொத்து வரி உயர்வு
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சொத்து வரி உயர்வு குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துவிட்டது. வாக்களித்த மக்களுக்கு இந்த அளவுக்கு யாருமே துரோகம் செய்திருக்க மாட்டார்கள். சொத்து வரி உயர்வை கண்டித்து மதுரையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அதிமுக ராமராஜ்யம் நடத்தியது
மெலும் செல்லூர் ராஜூ பேசுகையில், “அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. திமுக ஆட்சியில் விலைவாசியும் விஷம் போல் ஏறி வருகிறது. ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து திமுக அரசு அரங்கேறி வருகிறது. கடந்த 11 மாத காலத்தில் மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. தமிழகத்தில் 10 ஆண்டு காலம் அதிமுக ராமராஜ்யம் நடத்தியது. அதிமுக ஆட்சியில் எல்லா மக்களும் சுபிட்சமாக வாழ்ந்தனர். தற்போது திமுக ஆட்சியால் தமிழகம் கலியுகமாக மாறிவிட்டது. விரைவில் தமிழகத்தில் மீண்டும் ராமராஜ்யம் வரும் . தமிழகம் ராமராஜ்யமாக மாறும். எம்ஜிஆர்-ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும்.” என்று செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

ராஜ்கிரண் பரபரப்பு
இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை இட்டு பரபரப்பு கிளப்பியுள்ளார். அரசியல் ரீதியாக கருத்து சொல்வதில் தயங்காத ராஜ் கிரண், செல்லூர் ராஜூவின் பெயரை குறிப்பிடாமல் கருத்திட்டுள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ள கருத்து இதுதான்.
“ராம ராஜ்யமோ,
ராவண ராஜ்யமோ,
அதுவல்ல இங்கே பிரச்சினை...
மக்களிடமிருந்து
கசக்கிப்பிழிந்து வாங்கும் வரிப்பணங்களை,
மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து,
மக்களுக்காக மட்டுமே செலவிடும்,
சத்ய ராஜ்யமே இங்கு தேவை...” என்று ராஜ் கிரண் பதிவிட்டுள்ளார்.
