அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஆட்சி நன்றாகவே நடக்கிறது என பாஜகவில் சமீபத்தில் இணைந்த குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.

 ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு நடிகை குஷ்பு அளித்துள்ள பேட்டியில், ’திருமாவளவனின் கருத்தை கண்டித்து சிதம்பரத்துக்கே சென்று நான் போராட்டம் நடத்தினால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று போலீசார் நினைத்தனர். தமிழகத்தில் பா.ஜனதாவை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாங்கள் இதை நிரூபித்து காட்டுவோம். அந்த தேர்தல் ஒவ்வொருவருக்கும் வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் பெரிய தலைவர்களை இழந்து முதல் முதலாக மிகப்பெரிய தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று யாருக்கும் தெரியாது. அ.தி.மு.க.வை பொறுத்த வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பலை எதுவும் இல்லை.

இந்த ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஆட்சி நன்றாகவே நடக்கிறது. அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். மீண்டும் வெற்றி பெறுவோம். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு எத்தனையோ நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதை காங்கிரஸ் எதிர்ப்பது ஆச்சரியமாக உள்ளது. முத்தலாக் சட்டம் கொண்டு வந்திருப்பதன் மூலம் சிறுபான்மை பெண்களை மத்திய அரசு காப்பாற்றி உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது போல அடுத்து அங்கு மசூதியும் கட்ட இருக்கிறார்கள். காஷ்மீரில் இரண்டு கொடிகள் என்பது ஏற்புடையது அல்ல. ஒரே நாட்டில் ஏன் இரு வேறு கொடிகள் இருக்க வேண்டும். ராகுல்காந்தி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் மேலும் பல தோல்விகளை சந்திக்கும். ராகுல் தன்னை சுற்றி இருக்கும் கோட்டை உடைத்துவிட்டு வெளியில் வர வேண்டும். பா.ஜனதாவில் எனக்கு இன்னும் எந்த பொறுப்பும் தராவிட்டாலும், கட்சியை தமிழகத்தின் மூலை, முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம். பா.ஜனதா இந்துக்களுக்கு மட்டுமே உரிய கட்சி என்ற பிம்பத்தை நான் உடைத்து காட்டுவேன்’’என அவர் தெரிவித்தார்.