புதிய கல்விக்கொள்கையை வரவேற்பதாக தனது ட்விட்டர் பக்கத்திலும், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் வெளிப்படையாக தெரிவித்து இருந்த நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. 
 
புதிய கல்விக்கொள்கையின் பல அம்சங்களை காங்கிரஸ் விமர்சித்துவந்த நிலையில், குஷ்புவின் திடீர் கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதுகுறித்து விளக்கமளித்து குஷ்பு தனது கருத்தை, ‘’தான் பாஜகவுக்கு செல்லவில்லை. என் கருத்து கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம் ஆனால், நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர். புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்க்கிறேன்’’ என அவர் தெரிவித்து இருந்தார். 

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குஷ்பு வரவேற்ற நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘’காங்கிரசில் கருத்து சுதந்திரம் உண்டு. காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றுக்கருத்து கூறினால் வரவேற்போம். ஆனால் பொதுவெளியில் கூறுவது முதிர்ச்சியின்மை. ஏதோ லாபம் எதிர்பார்ப்பதுபோன்று கருத்து சொல்லக்கூடாது. சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசுவது விரக்தியின் வெளிப்பாடு. 

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கின்றனர். ஆதிக்க சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதுபோல் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்தது கண்டிக்கத்தக்கது’’ என அவர் தெரிவித்துள்ளார். அழகிரி இவ்வளவு காட்டமாக கண்டனத்தை பதிவு செய்துள்ளது குஷ்பு விரைவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்பதை தெளிவுபடுத்துகிறது.