காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லையில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் திமுக தொண்டர் ஒருவர் மண்ணெண்ணெய் கேன் எடுத்து வந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து, தமிழகம் முழுதும்  போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போராட்டத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பங்கேற்றுள்ளன. விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

போராட்டக்காரர்கள், பேருந்து - ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் 80 சதவிகித வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுவிட்டன. 

பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் முழுமையாக மூடப்பட்டன. சங்கரன்கோவில், தென்காசி, வள்ளியூர், களக்காடு, ஆலங்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்று பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வேன், ஆட்டோ போன்றவைகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

நெல்லை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலம் பகுதியில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்ட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மற்றும் ஏராளமான திமுகவினர் திரண்டு வந்து தண்டவாளத்தில்
அமர்ந்தனர்.

அப்போது, நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரயிலை திமுகவினர் மறித்தனார். இதனால் சுமார் ஒரு மணி நேரமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தண்டவாளத்தில் அமர்ந்திருந்த திமுக தொண்டர் வைத்திருந்த பையை மாநகர காவல்துறை உதவி கமிஷனர் விஜயகுமார் சோதனையிட்டார்.

அந்த பையில் மண்ணெண்ணெய் கேன் இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செயது, அந்த நபரை எச்சரித்து அனுப்பி வைத்தார். ரயில் மறியல் போராட்டத்தில், திமுக தொண்டர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.