கட்சி துவக்கியிருக்கும் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் குருவாக இருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வரான பினராயி விஜயன். ஆனால் தமிழக மார்க்சிஸ்ட் தலைமையோ கமலை ‘ஊழலை இவரால் ஒழிக்க முடியாது!’ என விமர்சிப்பதுதான் அதிர்ச்சி மிகு ஆச்சரியம். 

கேரள முதல்வரும், சீனியர் மார்க்சிஸ்ட் காம்ரேடுமான பினராயி விஜயனிடம் தான் கமல்ஹாசன் தன் அரசியல் சந்தேகங்களுக்கு தீர்வு காணுகிறார். அரசியலுக்குள் நுழையலாமா? என்கிற எண்ணம் தோன்றியபோதே அவர் திருவனந்தபுரத்திலுள்ள பினராயியின் வீட்டுக்கு சென்று, ஓணம் விருந்து உண்டபடியேதான் பல விஷயங்களை அலசிவிட்டு வந்தார். அதன் பிறகு கமலின் அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றிலும் பினராயியின் ஆலோசனைகளும், அறிவுரைகளும் இருந்தன. கடந்த புதனன்று கமல் கட்சி துவங்கியபோது கூட வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கில் அவரை வாழ்த்தி பேசினார் பினராயி. 

ஆக தேசிய மார்க்சிஸ்டின் ஒரு முன்னோடி கேரள தலைவர், தமிழக கமலுக்கு பக்கபலமாய் இருக்கிறார். ஆனால் தமிழக மார்க்சிஸ்டோ கமலை டம்மியாகத்தான் நினைக்கிறது. அக்கட்சியின் புதிய மாநில செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் பாலகிருஷ்ணன் இதை வெளிப்படையாகவே போட்டுடைத்திருக்கிறார். 

கமலை விளாசியிருக்கும் அவர், “கமல் தான் இடதுசாரி இல்லை, வலது சாரியும் இல்லை என்கிறார். நீங்கள் இடது இல்லை என்றாலே வலதுதானே! நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் அவர்களை எதிர்கொள்வதிலோ, அவர்களை தாண்டி அரசியல் வெற்றிகளை ஈட்டுவதிலோ எங்களுக்கு எந்த பிரச்னையோ, பின்னடைவோ இல்லவே இல்லை. 

கமல் ஊழலை ஒழிப்பேன், ஒழிப்பேன் என்கிறார். எந்த ஊழலை ஒழிப்பாராம்? மேல் மட்டத்து ஊழலை ஒழிக்காமல் வேறு எந்த அளவிலும் இவரால் ஊழலை ஒழித்துவிடவே முடியாது.” என்று பொளந்திருக்கிறார் போட்டு. 

கமலின் அரசியல் சித்தாந்தத்தை வடிவமைத்திருப்பதில் பினராயி விஜயனுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. ஆனால் தமிழக மார்க்சிஸ்ட் தலைமை அதை விமர்சிப்பதன் மூலம் பினராயியையே அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்பதுதானே பொருள். மார்க்சிஸ்ட் இப்படி இரட்டை  நிலைப்பாடு எடுக்க என்ன காரணம்? என்று விசாரித்தால், ‘தமிழக மார்க்சிஸ்டுக்கும் கமலின் சித்தாந்தங்கள் பிடித்திருக்கின்றன.

ஆனால் கமலை ஆதரித்தால், எதிர்வரும் தேர்தலில் தாங்கள் தொற்றிக் கொள்ள இருக்கின்ற தி.மு.க.வின் கூட்டணி முதுகு கிடைக்காது. ஏற்கனவே சட்டமன்றத்தில் ஜீரோவாக இருக்கும் மார்க்சிஸ்ட், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சிகளிலாவது எதையாவது அறுவடை செய்ய நினைக்கிறது. கமல் ஆதரவால் அதுவும் போய்விட கூடாது என்கிற பயமே இப்படி பேச வைக்கிறது.” என்று அதன் விநோத நிலைப்பாட்டின் பின்னணியை உடைக்கிறார்கள் விமர்சகர்கள்.