சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம்  கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசு உறுதியாக  இருந்தது. 

உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் சென்று வழிபட்டனர்.

இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கைரளி டிவி-யின் பெண் பத்திரக்கையாளர் ஷாஜிலா என்பவருக்கு சபரிமலைக்குப் பெண்கள் சென்று வந்தது தொடர்பாக பாஜக  தலைவர்களைச் சந்தித்துப் பேச அசைன்மென்ட் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதை முடித்துக்கொண்டு திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமைச்செயலகம் வழியாகத் திரும்பியுள்ளார். இவர் திரும்பும்போது சங் பரிவார் அமைப்புகள், திடீரென தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். அங்கு இருந்த பதாகைகள் உள்ளிட்டவற்றைக்  கிழித்தெறிந்தவர்கள், திடீரென அங்கிருந்த செய்தியாளர்களை தாக்கத் தொடங்கினர்.

இதைப் பார்த்த  ஷாஜிலா  தான் வைத்திருந்த கேமரா மூலம் அங்கு நடந்தவற்றை பதிவு செய்தார். அப்போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்த சங் பரிவார் அமைப்பினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

ஆனால் அவர்  மிரட்டலைக் கண்டுகொள்ளாமல்  தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து  அவர்கள் தகாத முறையில் ஷாஜிலாவின் பின்புறம்  எட்டி உதைத்தார்கள். ஆனாலும் அந்த வலியைப் பொருட்படுத்தாமல் அழுதுகொண்டே அவர் பணி செய்துள்ளார்.

இது குறித்து கருததுத் தெரிவித்த ஷாஜிலா, என் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் இது. என்னை யார் அப்படித் தகாத இடத்தில் உதைத்தார்கள் எனத் தெரியவில்லை. என்னை அறியாமல் அது எனக்கு வலியைத் தந்தது. நான் வலியால் தவித்துக்கொண்டிருந்தபோது, அந்தக் கும்பல் எனது கேமராவைப் பிடுங்க முயன்றது. ஆனால், எப்படியோ தடுத்துவிட்டேன். நேற்று நடந்த சம்பவங்களை எப்போதும் நான் மறக்கவே மாட்டேன் என கூறினார்.

தற்போது அவர் அழுதுகொண்டே கேமராவை இயக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.