கேரளாவில் உணவு திருடியதற்காக அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர்  மதுவின் தங்கைக்கு போலீஸ் வேலை கிடைத்துள்ளதால் அந்த குடும்பமே  மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த  பழங்குடியின இளைஞர் மது உணவு திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டது தவறான குற்றச்சாட்டு என்று தெரிய வந்ததால் கேரளாவில் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.முதலமைச்சர்  பினராயி விஜயன் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன் அரசு அதிகாரிகளுடன் மதுவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை கேரள அரசு செய்யும் என்றும் உறுதி  அளித்தார்.பழங்ழுடியின இளைஞர்  மது கொலை செய்யப்பட்ட அதேநாளில் கேரளாவில் போலீஸ்  வேலைக்கான எழுத்து தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு மதுவின் தங்கை சந்திரிகா விண்ணப்பித்திருந்தார். அண்ணன் கொலையுண்ட துக்கம் இருந்தாலும் அதை மனதில் மறைத்துக்கொண்டு போலீஸ் எழுத்து தேர்வை எழுதினார்.
இந்த நிலையில் போலீஸ் எழுத்து தேர்வுக்கான முடிவுகள்  நேற்று வெளியாகி உள்ளன. இந்த தேர்வில் சந்திரிகா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு முதல்நிலை பெண் காவலர் பணி கிடைக்க உள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரிகா, எனது அண்ணன் மது செய்யாத குற்றத்துக்காக அடித்து கொலை செய்யப்பட்டது எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் மனவேதனையை கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அண்ணன் கொலை செய்யப்பட்ட நாளில் நான் மிகுந்த மனவேதனைக்கிடையே போலீஸ் எழுத்து தேர்வை  எழுதினேன்  தற்போது அதில் தேர்ச்சி பெற்றுள்ளதால் எங்கள் குடும்பம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வேலை மூலம் கிடைக்கும் வருவாய் எங்கள் குடும்பத்தின் வறுமையை போக்க ஓரளவு உதவும் என்றும் சந்திரிகா தெரிவித்தார்.