நாடு முழுவதும்  மிகச்சிறந்த மருத்துவ வசதி மற்றும் சுகாதாரமான மாநிலங்கள் குறித்து நிதி ஆயோக் அமைப்பு ஆய்வு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. மருத்துவ வசதிகள், குழந்தைப் பிறப்பு, பிரசவத்தின் போது கர்ப்பிணிகள் உயிரிழப்பது, குழந்தைகள் இறந்தே பிறப்பது என, 23 அம்சங்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலமும் பட்டியலிடப்படுகிறது.

பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என, 3 பிரிவுகளாக பிரிக்கபட்டு, அதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், நிடி ஆயோக் துணை தலைவர், ராஜிவ் குமார், இந்தப் பட்டியலை வெளியிட்டு உள்ளார்.

இதில் கடந்த ஆண்டு  முதலிடத்தைப் பிடித்த கேரளா, இந்த முறையும் முதலிடம் பிடித்துள்ளது. ஆந்திரா, மஹாராஷ்டிரா அதற்கடுத்த இடங்களில் உள்ளன. கடந்தாண்டு வெளியிடப்பட்ட, முதல் பட்டியலில், கேரளா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு, முதல் மூன்று இடங்களைப் பிடித்திருந்தன.

பெரிய மாநிலங்களில், மிகவும் மோசமான மாநிலங்களாக, பீஹார் மற்றும் உ. பி.,உள்ளன. முந்தைய ஆண்டைவிட, அதிக முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்களாக, ஹரியானா, ஜார்க்கண்ட், அசாம் உள்ளன. அதே நேரத்தில், முன்பைவிட மிக வும் மோசமான மாநிலமாக, சத்தீஸ்கர் உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த பட்டியல் தயரிக்கப்பட்டு உள்ளது.

சிறிய மாநிலங்களில், மிசோரம், மணிப்பூர் ஆகியவை முதலிரண்டு இடங்களில் உள்ளன. மணிப்பூர் மற்றும் கோவா ஆகியவை, நல்ல முன்னேற்றம் கண்ட மாநிலங்களாக உள்ளன. யூனியன் பிரதேசங் களில், சண்டிகர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த முறை வெளியிடப்பட்ட பட்டியலில், மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது, 9 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.