கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிவதற்கான ஆன்டிபாடி பரிசோதனை கேரளத்தில் திங்களன்று தொடங்கியது, இதன்மூலம் 15 நிமிடங்களில் கோவிட் தொற்று கண்டிறியமுடியும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இந்தியாவில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதாக கூறப்படும் நிலையில்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் ஆன்டிபாடி பரிசோதனையை கேரள அரசு தொடங்கியுள்ளது. அதாவது சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், பொதுமக்களுடன் அதிக தொடர்புள்ள பொது நல ஊழியர், அரசு ஊழியர், வெளிமாநில தொழிலாளர்கள், சரக்கு வாகன ஓட்டுனர்கள் போன்ற அண்மைக் காலத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் வீடுகளிலும், அரசின் கண்காணிப்பில் உள்ளவர்கள்,  60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுவாசக் கோளாறுகளுக்கு சிகிச்சை பெற்று  வருவோர் போன்றோர்களுக்கு ஆன்டிபாடி பரிசோதனை செய்யப்படுகிறது.

 

அவரவர் வசிக்கும் இடங்களுக்கு சென்று இலவசமாக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை வரம்புக்குள் வருகிறவர்கள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்படுவார்கள், ஐ.சி.எம்.ஆர் அளித்துள்ள 14 ஆயிரம் கருவிகளில் 10 ஆயிரம் கருவிகள் மூலம் முதற்கட்ட பரிசோதனை நடத்தப்படுகிறது. நோய்த்தொற்று கண்டறியபட்டவர்களின் எண்ணிக்கை, வெளியிடங்களில் இருந்து திரும்பி  வந்தவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், திருச்சூர், திருவனந்தபுரம் மாவட்டங்களில் பரவலான பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களில் தலா 1000 கருவிகள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவிட் நோயாளிகளை பராமரிக்கும் ஊழியர்கள் மற்றும் அது அல்லாத மற்ற சுகாதார ஊழியர்கள் அந்தந்த மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்படுவர், விரல் நுனியில் இருந்து ரத்தம் எடுத்து நடத்தப்படும் ஆன்டிப்பாடி பரிசோதனையில் 15 நிமிடங்களுக்குள் முடிவு தெரிந்துகொள்ளலாம். உடலில் ஏதேனும் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதையும் இந்த ரத்தப் பரிசோதனையில் அறிந்துகொள்ளலாம். நோய்தொற்று கண்டறியப்பட்டால்  பிசிஆர் பரிசோதனை மூலம் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும். இரண்டாவது கட்டத்தில் 40,000 ஆண்டிபாடி பரிசோதனை கருவிகளை வழங்க உள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அந்தக் கருவிகளும் கிடைத்துவிட்டால் பரிசோதனை எண்ணிக்கையை மேலும் அதிகபடுத்த கேரளா திட்டமிட்டுள்ளது.