கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பேய் மழை கொட்டி வருகிறது. கிட்டத்தட்ட 13 மாவட்டங்கள் முற்றிலும் உருக்குலைந்து போனது. முக்கியமாக இடுக்கி, மலப்புரம், மூணார், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் நீரால் மூழ்கிப்  போயின.

கேரளாவில் உள்ள 25 அணைகளும் அதன் முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதால் அனைத்து அணைகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அதே நேரத்தில் கனமழை மட்டுமல்லாமல் அந்த மாநிலம் எங்கும் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலச்சரியில் சிக்கி ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினரும், ராணுவத்தினரும் தீவிர  மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் எர்ணாகுளத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் இடுக்கி  பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுளளவர்களை கயிறு மூலமும், மோட்டர் படகுகள், ஹெலிகாப்டர் மூலமும் மீட்டு வருகின்றனர்.

மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை சிறிய அளவில் தற்காலிக பாலங்களை கட்டி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

 

இந்நிலையில் கேரளாவில் மழை, வெள்ளம் நிலச்சரிவு போன்ற தொடர் இடர்பாடுகளை அடுத்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பம்பரமாக சுற்றி சுழன்று மீட்புப் பணிகளை முடக்கி விட்டுள்ளனர்.

 

வயது மூப்பு, உடல் நலக்குறை போன்ற பிரச்சனைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு முதலமைச்சர்  பினராயி விஜயன். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ஹெலிகாப்டர் மற்றும் ஜீப்பில் பயணம் செய்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவரைப் போன்றே அமைச்சரவை சகாக்களும் நிவாரணப் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கேரள நிதியமைச்சர் ஜோசப், பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து நேரடியாக களத்தில் குதித்துள்ளார். வெள்ளத்தில் சிக்கியுள்ள பொது மக்களை படகு மற்றும் ஜீப்பில் சென்று மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

 

வயநாடு அருகே கடுமையான மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன அமைச்சர் ஜோசப், அங்கிருந்த குழந்தை ஒன்றை கொஞ்சி மகிழ்ந்தார்.

 

வெள்ள நிவாரணப் பணிகள் என்பது, ஒரு அலுவலக அறையில் உட்கார்ந்து கொண்டு, உததரவிடுவது மட்டுமல்ல, அமைச்சர்கள் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றுவது என்பது கேரளாவில் சகஜம். ஆனால் இது போன்று தமிழகத்தில் நடக்குமா என்பது கேள்விக்குறிதான்.