மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கேரள சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்களின் ஆதரவுடன்  சட்டப் பேரவையில்  தீா்மானம் நிறைவேறியது.

இதனிடையே, ‘குடியுரிமை தொடா்பாக சட்டமியற்ற நாடாளுமன்றத்துக்கே அதிகாரம் உள்ளது; இந்த விவகாரத்தில், சட்டப் பேரவைகளுக்கு அதிகாரம் கிடையாது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உடனடியாக சரியான சட்ட ஆலோசனைகளை பெற வேண்டும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்திருந்தார்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது நாடாளுமன்ற அவமதிப்பு மற்றும் உரிமைமீறல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடுக்கு பாஜக  கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பினராயி விஜயன் தனது கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதில் மாநில சட்டப் பேரவைகளுக்கு தனி உரிமைகள் உள்ளன. அதில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது என அதிடிரயாக தெரிவித்துள்ளார்.


குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளம்தான். அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை மீறும் வகையில் உள்ளதால், அந்த சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் தற்போதைய காலகட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே, எதையும் மறுக்க முடியாது என்று தெரிவித்தார்.