கேரளா மாநிலம் பாலக்காடு மாட்டத்தில் உள்ள வாளையார் பகுதியில் குடியிருப்பவர் கிருஷ்ணன்.  அவரது மனைவி மீனா. இவர்கள் இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாலதி மற்றும் ராணி என்ற இரு மகள்கள் இருந்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 வயது நிரம்பிய மாலதி என்ற மூத்த மகள் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள். இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார் போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அந்த சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தான் மற்றொரு கொடூரம் அங்கு நிகழ்ந்தது,

மாலதி கொலை செய்யப்பட்டு சரியாக இரண்டு மாதத்தில் அவரின் தங்கை ராணியும் அதே வீட்டில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிருஷ்ணனின் உறவினர்கள் முத்து, ஷிபு, மது மறறும் பிரதீப் குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 4 ஆவது குற்றவாளியான பிரதீப்குமாரை நீதிபதி முரளி கிருஷ்ணன் கடந்த 30 ஆம் தேதி விடுவித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிறுமிகள் கொலை வழக்கில் கடந்த வெள்ளிக் கிழமை  பாலக்காடு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 2 சிறுமிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார்  உரிய ஆதாரகளை சமர்ப்பிக்கவும் குற்றத்தை நிருபிக்கவும் தவறிவிட்டதால் குற்றவாளிகள் மூவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு கேரளா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை போலீசார் தப்பவைத்து விட்டனர் என கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன,


இந்நிலையில் பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கொல்லப்பட்ட சிறுமிகளின் மரணத்துக்கு , மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மரணமடைந்த 2 சிறுமிகளின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.