விருதுநகர் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்றும் அதில் உள்ள 7 சட்டமன்றம் தொகுதிகளையும் வரும் சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றி புதிய சரித்திரத்தை படைப்போம் என்று அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் தொகுதி வாரியாக கழக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமான கட்சி பிரமுகர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதில் தொகுதிவாரியாக நிர்வாகிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்கள் சேர்க்கைக்கான படிவத்தை அமைச்சர் வழங்கினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:  புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். அம்மாவின் அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று பொதுமக்கள் மற்றும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்த எண்ணத்தை வாக்குகளாக மாற்ற கட்சியின் பொறுப்பாளர்கள் அரும்பாடு படவேண்டும். அம்மா அவர்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மாவின் அரசு மக்களுக்கான அரசு. உழைப்பவர்களுக்கு பதவி தரும் ஒரே இயக்கம். 

கழக நிர்வாகிகள் கழக ஆட்சியை மூன்றாவது முறையாக அமைத்து எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க அரும்பாடு படவேண்டும். இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம்தான் சிறப்பாக செயல்படுகிறது என்று பாரத பிரதமரே தமிழகத்தை முதல்வர்கள் மாநாட்டில் பாராட்டி இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் பாடுபடுவோம், விருதுநகர் மாவட்டம் என்பது அதிமுகவின் கோட்டையாக இருக்க வேண்டும் எனவும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.