முன்னாள் எம்.பி.யும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான  கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுகவின்  ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணனான் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு  மாசு ஏற்படும் வகையில் நடந்த கொண்டதாலும், கழக கடுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், முன்னாள் எம்.பி.யும், கழக் செய்தித் தொடர்பாளரும் திருப்பூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான  கே.சி.பழனிசாமி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து  வருவதாக இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் மத்திய அரசுதான் தமிழக அரசை இயக்கிவருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோர் மோடியின் அடிமைகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அதிமுக பங்கேற்கும் என இன்று கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த  காரணத்துக்காகத்தான் கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.