அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வேலுமணியுடன் குற்றம்சாட்டப்பட்ட கேசிபி நிறுவன நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வேலுமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் வழக்கில் தொடர்புடைய கேசிபி நிறுவன நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் உட்பட 52 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் 811 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை தமக்கு வேண்டியவர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒதுக்கீடு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், கே.சி.பி.என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ், நிறுவன இயக்குனர் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள கே.சி.பி.என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ்க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் சிகிச்சை பெற்று வருகிறார்.
