முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்க்கும் வகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார்.

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி, கே.சி.பழனிசாமியை கட்சி பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.

தனது நீக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்த கே.சி.பழனிசாமி, எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருக்கும் தன்னை நீக்க பழனிசாமிக்கோ பன்னீர்செல்வத்துகோ அதிகாரம் இல்லை என தெரிவித்தார். மேலும் அதிமுகவின் புதிய பதவி திருத்தங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. தேவைப்பட்டால் அவற்றையும் வெளியிடுவேன் என எச்சரித்தார்.

மேலும், பழனிசாமியும் பன்னீர்செல்வமும் முயற்சிகளை மேற்கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டால், நான் அரசியலிலிருந்தே ஒதுங்கி விடுகிறேன் எனவும் சவால் விடுத்துள்ளார்.