கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி தான் தமிழகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ள எஸ். விஜயதாரணி என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பதிலளிக்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக அவர் கூறினார். 

* கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் சிலை, மற்றும் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம், அவரது சொந்த ஊரான, நாகர்கோயில் அருகில் உள்ள தேரூரில் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

* இரட்டைமலை சீனிவாசனுக்கு மதுராந்தகத்தில் நூலகத்துடன் ஒரு கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

* பேராசிரியர் முத்தரையருக்கு திருச்சியில் ஒரு கோடி மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். 

* பெனிக்குவிக், வீரன் அழகுமுத்துக்கோன், மா.பொ.சி, சி.பா.ஆதித்தனார் ஆகியோர் பிறந்த நாள்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். காளிங்கராயன் நினைவை போற்றும் வகையில் அரசு விழா நடத்தப்படும் என்றும் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.