இருள் சூழ்ந்த போதிலும் இமை மூடாத தொண்டர்களின் விண்ணைப் பிளக்கும் முழக்கம். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என்ற காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானதையடுத்து மருத்துவமனைக்கு தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளது. காவேரி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 

கருணாநிதி கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் முதல் முறையாக தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். இந்நிலையில் இன்று மாலை காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கருணாநிதியின் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை பொறுத்தே கணிக்க முடியும். மருத்துவ உபகரணங்கள் உதவிகளுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் கலக்கம் அடைந்து மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் அனைவரும் எழுந்து வா தலைவா, அறிவாலயம் போகலாம் வா என்று முழக்கங்கள் எழுப்பினர். 

மருத்துவமனையின் முன்பு குவிந்த தொண்டர்கள்,

எழுந்து வா தலைவா... எழுந்து வா தலைவா... 
எழுந்து வா தலைவா... எழுந்து வா தலைவா... 
அறிவாலயம் போகலாம் வா... அறிவாலயம் போகலாம் வா...
அறிவாலயம் போகலாம் வா... அறிவாலயம் போகலாம் வா...
அறிவாலயம் வா தலைவா...  அறிவாலயம் வா தலைவா... 
அறிவாலயம் வா தலைவா...  அறிவாலயம் வா தலைவா... 
வாழ்க வாழ்க வாழ்கவே...டாக்டர் கலைஞர் வாழ்கவே... என்று தொண்டர்கள் கோஷமிட்டப்படி இருக்கின்றனர்.