பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில் தேர்தல் முடியும் வரை கைது செய்யக்கூடாது என பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
குக்கர் சின்னம் கிடைக்கல.. ஆளும் அதிமுகவின் கடும் நெருக்கடி… கோர்ட்… வழக்கு என்று கடும் நெருக்கடியில் உள்ள அமமுகவுக்கு தற்போது பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு மீதான பாலியல் புகார் தான்.
பெரியகுளம் அருகே சருத்திபட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தேனி மகளிர் போலீசில் கதிர்காமு மீது பாலியல் புகார் அளித்தார். அதில் கடந்த 2015ம் ஆண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது, டாக்டர் கதிர்காமு மயக்க ஊசி போட்டு தன்னை கற்பழித்துவிட்டதாக புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து, கதிர்காமு மீது 3 பிரிவுகளின் கீழ் தேனி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். இதனால் எந்த நேரமும் கதிர்காமு கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இது அரசியல் சதி என்று கதிர்காமு விளக்கம் அளித்தாலும், ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக சொல்லப்பட்டது.

இதனிடையே அரசியல் காரணங்களுக்காக தம் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக கதிர்காமு மதுரை ஐகோர்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணையில் "மனுதாரர் முக்கியமான அரசியல் கட்சி வேட்பாளர் ஆவர். அவர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். அந்த சமயத்தில் அவரை போலீசார் திடீரென கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று கதிர்காமு தரப்பில் வாதாடப்பட்டது.

இது தொடர்பான இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கதிர்காமுக்கு நீதிபதி முன்ஜாமீன் வழங்கியதுடன், தேர்தல் முடியும் வரை கதிர்காமுவை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார். இதையடுத்து கதிர்காமு ஒரு பெரிய கண்டத்திலிருந்த தப்பித்தார் என்றே சொல்ல வேண்டும்.
