காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு  அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனால் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும்  ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால் அங்கு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொலைத்தொடர்பு மற்றும் இணைய தள சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. உமர்அப்துல்லா, மெகபூபா உள்பட 400 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதோடு கூடுதலாக 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இத்தகைய அதிரடி காரணமாக காஷ்மீரில் வன்முறை ஏற்படுவது ஒடுக்கப்பட்டது. கடந்த 2 வாரமாக காஷ்மீரில் திருப்தி அளிக்கும் வகையில் அமைதி நிலவுகிறது. 

ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை  கொண்டு வரும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அதன் முதல் படியாக காஷ்மீரில் இன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தனது ட்விட்டரில் ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் இல்லை; இணையசேவை மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. மெகபூபா முப்தியின் மகள் வீட்டுக்காவலில் உள்ளார், ஏன் என்று கேட்டால் பதிலில்லை என தெரிவித்துள்ளார்.

இணைய சேவை முடக்கம், வீட்டுக்காவல் இருந்தும் இயல்பு நிலை திரும்பியதாக கூறுகிறார்கள். என்ன நடக்கிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், இது புதிய இயல்பு என கிண்டலாக தெரிவித்துள்ளார்.