கடந்த திங்களன்று பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு காங்கிரசுக்கு எதிராக வைகோ மிக கடுமையாக பேசி வருவது அவர் மீது திமுகவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.

காஷ்மீர் விவகாரத்தால் நாடே கொந்தளிப்பான சூழலில் இருந்த நிலையில் திடிரென திங்களன்று பிரதமர் மோடியை வைகோ சந்தித்து பேசினார். அன்றைய தினம் அடுத்த சில மணித்துளிகளில் நாடாளுமன்றத்தில் காஷ்மீரை பிரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் அந்த பரபரப்பான அரசியல் சூழலிலும் வைகோவை சந்திக்க மோடி நேரம் கொடுத்திருந்தது தான் ஆச்சரியம். 

மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது வைகோ மிகவும் ஆவேசமாக இருந்தார். காஷ்மீரை ஒரு போதும் பிரிக்கவிடமாட்டோம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து என்று முழங்கித் தீர்த்தார் வைகோ. மேலும் நாடாளுமன்றத்திற்குள் ஜனநாயக படுகொலை நிகழ்ந்திருப்பதாக வைகோ கூறியதை கேட்டு வெங்கய்ய நாயுடு ஒரு கனம் அதிர்ந்து போனார்.

 

பின்னர் பேச வாய்ப்பளிக்கப்பட்ட போது காஷ்மீரின் வரலாற்றை மிக குறுகிய நேரத்தில் அசத்தசலாக எடுத்துரைத்தார் வைகோ. மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து எதனால் கொடுக்கப்பட்டது என்று வைகோ கூறிய போது மொத்த சபையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது தான் வைகோ காங்கிரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிபோக காரணமே காங்கிரஸ் தான் என்று வைகோ கூற ஒரு நிமிடம் ஆளும் பாஜக எம்பிக்களே ஆடிப் போய்விட்டனர்.  

மேலும் ஏற்கனவே இரண்டு முறை காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி காங்கிரஸ் நடந்து கொண்டதாகவும் அதன் தொடர்ச்சியாகவே தற்போது பாஜக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் வைகோ தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் காஷ்மீர் மக்களுக்கு இரண்டு முறை துரோகம் செய்துள்ளதாக கூறி வரலாற்றை படித்துக் காட்டினார் வைகோ. இத்தனைக்கும் தமிழகத்தில் மதிமுகவும் – காங்கிரசும் கூட்டணிக் கட்சிகள்.

 

நாடாளுமன்றத்தோடு வைகோ இதை விடவில்லை. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போதும் வைகோ காங்கிரசை கடுமையாக சாடினார். நட்பு மற்றும் நம்பிக்கை அந்த இரண்டு வார்த்தைக்கும் காங்கிரசுக்கும் தொடர்பே இல்லை என்று வைகோ பொங்கித் தள்ளினார். முதுகில் குத்துவதில் காங்கிரஸ் வல்லமை படைத்தது என்றும் வைகோ பகீர் கிளப்பினார். 

மோடியை சந்தித்துவிட்டு வந்த பிறகு தான் வைகோ காங்கிரசுக்கு எதிராக தீவிரமாக முழங்க ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் மோடியுடனான சந்திப்பின் போது இது குறித்து ஏதும் பேசப்பட்டதா? அல்லது அரசியல் ரீதியாக திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வைகோ மூலமாக பாஜக திட்டமிடுகிறதா என்றெல்லாம் திமுக யோசிக்க ஆரம்பித்தள்ளது. அதற்கான முகாந்திரமும் இருக்கிறது.