மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் வேத் மகாஜன் தலைமையில் ஒரு குழுவினர் நாளை மெகபூபா முப்தியை சந்திக்க இருக்கிறார்கள். ஆளுநர் சத்தியபால் சிங்கிடம் மெகபூபா முப்தியை சந்திக்க அனுமதிக்க கோரி இருந்தோம். அவர் அனுமதியளித்தார். நாளை 15 முதல் 18 உறுப்பினர்கள் செல்வார்கள் என நினைக்கிறேன் என கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிர்தோஸ் தக் தெரிவித்தார்.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டபின், முதல்முறையாக தனது கட்சித் தொண்டர்களை நாளை சந்திக்கிறார்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவு ஆகியவற்றை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரும்பப்பெற்றது மத்திய அரசு. இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஏறக்குறைய 2 மாதங்களுக்கு மேலாக வீட்டுக்காவலில் இருந்து வருகின்றனர். காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியதும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

அமைதி நிலவ தொடங்கியதால் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கையை காஷ்மீர் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் ஜம்மு பகுதியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் தலைவர்களை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விடுவித்தது. இந்நிலையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் அவரின் மகன் ஓமர் அப்துல்லாவை சந்தித்து பேச அவர்களது கட்சியின் உறுப்பினர்களுக்கு காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து ஜம்மு பகுதியின் தேசியமாநாட்டுக் கட்சியின் தலைவர் தேவிந்தர் சிங் ராணா தலைமையில் 15 பேர் கொண்ட குழு முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா,அவரின் தந்தை பரூக் அப்துல்லாவை இன்று சந்தித்துப் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது