சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியானது அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்டுத்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது நன்கு அறிந்த தகவலே என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கொரோனா தடுப்புப் பணிகளுக்காக வழங்கிய 60 லட்சம் ரூபாய் நிதியை கரூர் மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கண்டித்திருந்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிடவும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டரில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கொடுத்த நிதியை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று என்றும், இப்பிரச்சனையில் முதல்வர் கவனிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரையின்படி வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ட்விட்டரில் விதிமுறைகளின்படி செய்ததை குறை கூறியுள்ளார் என்றார். 

இது தொடர்பாக திமு தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது முகநூல் பக்கத்தில்;- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியானது அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்டுத்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது நன்கு அறிந்த தகவலே.. ஆனால், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மக்கள், கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும், அங்கு போதுமான அளவு வெண்டிலேட்டர் வசதி இல்லை என்பதாலும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தனது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்தார்.

இந்நிதியை 28.3.2020 அன்றே மாவட்ட ஆட்சித் தலைவர் தனது செயல்முறை ஆணை மூலம் ஏற்றுக் கொண்டுவிட்டு பின்னர் 31.3.2020 அன்று மறுத்து ஆணை பிறப்பித்துள்ளார். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டுவிட்டு, பிறகு மறுத்ததில் அரசியல் குறுக்கீடு இருக்கிறது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் பிரச்சினையை மேலும் வளர்க்க நான் விரும்பவில்லை. கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தேவையான வென்டிலேட்டர் வசதி செய்து தர உடனடியாக முதலமைச்சர் முன்வந்து அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எந்த நிதியிலிருந்து இதைச் செய்வது என்பது இப்போது முக்கியம் இல்லை; கரூருக்கு வென்டிலேட்டர் வசதிகள் உடனே வேண்டும் என்பதே முக்கியம் என்று கூறியுள்ளார்.