கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி கடந்த மாதம் திமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக  தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைந்தார்.

அப்போது பேசிய அவர், கரூர் மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப என்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன் என்றார். 

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த ஒரு சில நாட்களுக்குள்  கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியின்  இந்த அசுர வளர்ச்சி திமுகவினரையே அசர வைத்தது.

கட்சிக்காக செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தில் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருவதை திமுக தொண்டர்கள் பெரிதும் வரவேற்பு தெரிவித்து  வருகின்றனர். இதைத் தொடர்ந்து நாளை கரூரில் பிரமண்டமாக செயல் வீரர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் செந்தில் பாலாஜி.

இந்த கூட்டத்தில் 30 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற செந்தில் பாலாஜி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நாளை நடைபெற்வுள்ள இந்த கூட்டத்தை அசத்தலாக ஏற்பாடு செய்துள்ளார் செந்தில் பாலாஜி.