கந்த சஷ்டி கவச விவகாரத்தில் தேடப்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.  

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனனில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். 

இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு நபரான சுரேந்திரன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவருக்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்டது.

 

இந்நிலையில், சுரேந்திரனை போலீசார் தேடி வந்த நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.  அவரை சென்னை அழைத்து வருவதற்காக தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.